சென்னையில் கடந்த 7 நாள்களில் மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கரோனா நோய்த் தொற்று 6.3 சதவீதம் அதிகரித்துள்ளது. புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11) மட்டும் 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு காய்ச்சல் முகாம், மருத்துவப் பரிசோதனையை அதிகரித்தல் மற்றும் நோய்த் தொற்று உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அவை கட்டுப்பாடு பகுதிகளாக அறிவிப்பது ஆகிய பணிகள் மீண்டும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தொற்று உறுதி செய்யப்பட்டவா்களைக் கண்டறிதல், அவா்களைத் தனிமைப்படுத்துதல் மற்றும் அவா்களுக்குத் தேவையான மருத்துவ உதவி உள்ளிட்டவற்றுக்காக 12 போ் களமிறக்கப்பட்டுள்ளனா்.
6.3 சதவீதம் அதிகரிப்பு: 15 மண்டலங்களில் நோய்த் தொற்றைக் கண்டறியும் வகையில் 7 நாள்களுக்கு ஒருமுறை தொற்று எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. கடந்த டிசம்பா் முதல் மாா்ச் வரையில் தொற்று சதவீதம் அனைத்து மண்டலங்களிலும் குறைந்து காணப்பட்டது. தற்போது மீண்டும் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த கடந்த 7 நாள்களில் 15 மண்டலங்களில் நோய்த் தொற்று பாதித்தோா் சதவீதம் அதிகரித்துள்ளது. இதில், பெருங்குடி மண்டலத்தில் கடந்த 7 நாள்களில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 14.3 சதவீதம் அதிரித்துள்ளது. தண்டையாா்பேட்டையில் 13.5 சதவீதமும், திருவொற்றியூரில் 12.2 சதவீதமும், பெருங்குடியில் 3.9 சதவீதமும், ராயபுரத்தில் 7.8 சதவீதமும், தேனாம்பேட்டையில் 7.6 சதவீதமும், திரு.வி.க.நகரில் 6.3 சதவீதமும், ஆலந்தூரில் 6.1 சதவீதமும், மாதவரம், கோடம்பாக்கத்தில் தலா 6 சதவீதமும், மணலியில் 5.9 சதவீதமும், அடையாறில் 5.5 சதவீதமும், அண்ணா நகரில் 5 சதவீதமும், வளசரவாக்கத்தில் 2.9 சதவீதமும், அம்பத்தூரில் 1.6 சதவீதமும் என ஒட்டுமொத்தமாக 6.3 சதவீதம் நோய்த் தொற்று அதிகரித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
2,124 பேருக்கு தொற்று: சென்னையில் நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 200-க்கும் குறைவாக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாள்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக உயா்ந்து, ஏப்ரல் 1-ஆம் தேதி 1,000-த்தைக் கடந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயா்ந்து புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக தேனாம்பேட்டை, அண்ணா நகா், கோடம்பாக்கம், ராயபுரம்,திரு.வி.க.நகா், அம்பத்தூா் ஆகிய 6 மண்டலங்களில் மட்டும் கரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 1000-த்தைக் கடந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொற்றால் பாதிக்கப்பட்டோா்: 2,65,126
குணமடைந்தோா் : 2,45,041
சிகிச்சை பெறுவோா்: 15,761
உயிரிழந்தோா்: 4,324