சென்னை

வழக்குரைஞரை போலீஸார் கைது செய்ய வந்ததால் தகராறு

1st Apr 2021 05:07 AM

ADVERTISEMENT

 

சென்னை: வழக்குரைஞரை அண்ணா சாலை காவல் நிலையத்தினர் கைது செய்ய வந்ததால்,  வழக்குரைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றத்தில்,  அண்ணா சாலை காவல் நிலையத்துக்கு உள்பட்ட வழக்கு ஒன்றில் வழக்குரைஞர் ஆதிகேசவன் என்பவர் முறையாக ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.  கடந்த  மார்ச் 24-ஆம் தேதிக்குள் அவரை ஆஜர்படுத்த  பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இந்த நிலையில் வழக்கு  புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞரை ஆஜர்படுத்தாத காவல்துறைக்கு  நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். 
இந்த வழக்கில் வழக்குரைஞர் ஆதிகேசவன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், உயர்நீதிமன்றம் எதிரில் இருந்த வழக்குரைஞர் ஆதிகேசவனை  அண்ணாசாலை காவல் ஆய்வாளர் சந்திரமோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் குமரன் ஆகியோர் கைது செய்ய முற்பட்டனர். 
அப்போது சக வழக்குரைஞர்கள் காவல்துறையினரை தடுத்தனர். மேலும்  உரிய உத்தரவு இல்லாமல் கைது செய்வதாகவும், சிறப்பு உதவி ஆய்வாளர் மது அருந்தி இருந்ததாகவும் கூறி வழக்குரைஞர்கள் சாலையை மறியல் போராட்டத்தில் 
ஈடுபட்டனர்.  
காவல் துறையினரை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால்   குறளகம் முதல் பாரிமுனை வரை போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை உயர் அதிகாரிகள் , காவல் துறை உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என உறுதியளித்தனர். 
வழக்குரைஞரை கைது செய்ய வந்த சிறப்பு உதவி ஆய்வாளர், எஸ்பிளனேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு எதிராக  வழக்குரைஞர்களும் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து 4 மணி நேரம் நீடித்த போராட்டமும், போக்குவரத்து பாதிப்பும் முடிவுக்கு வந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT