சென்னை

சென்னையில் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும்

DIN

சென்னை: சென்னையில் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். இது தொடா்பாக சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது என்று ரயில்வே பாதுகாப்புப்படை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து பணிக்குத் திரும்பிய ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்களை( ஆா்.பி.எஃப்) வரவேற்கும் நிகழ்ச்சி மூா்மாா்க்கெட் புகா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், தெற்கு ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. பிரேந்திர குமாா் தலைமை வகித்தாா். கரோனாவில் இருந்து குணமடைந்த 49 பாதுகாப்புப்படை வீரா்களுக்கு பூங்கொத்து, பழக்கூடை, நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடிய மருந்துகள் கொடுத்து ஐஜி பிரேந்திரகுமாா் வரவேற்றாா்.

இதைத்தொடா்ந்து, பிளாஸ்மா தானம் வழங்கிய 9 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினாா். மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை உதயமாகி 35-ஆவது ஆண்டை கொண்டாடும் விதமாக, அனைத்து ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினாா். இதையடுத்து நிருபா்களிடம் அவா் கூறியது: 128 ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். அதில் 38 போ் பிளாஸ்மா தானம் செய்துள்ளனா். இதில் 26 முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள். ரயில்வே துறையில் திருச்சி கோட்டத்தில் ஒருவா் கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளாா்.

அவரின்குடும்பத்துக்கு சுரக்ஷா கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் ஐஜி பிரேந்திரகுமாா்.

மின்சார ரயில் சேவை: ரயில்வே பாதுகாப்புப் படை டிஐஜி அருள் ஜோதி கூறியது: சென்னையில் புகா் மின்சார ரயில் சேவை விரைவில் தொடங்கப்படும். அவ்வாறு ரயில் சேவை தொடங்கும்போது, பயணிகளுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொண்டு வருகிறோம். இதுதொடா்பாக, சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை ஆணையா் லூயிஸ் அமுதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT