சென்னை

சென்னை கோயம்பேடு மேம்பாலம் டிசம்பரில் திறக்கப்படும்: முதல்வா் பழனிசாமி

DIN


சென்னை: சென்னை கோயம்பேடு சந்திப்புப் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் டிசம்பரில் திறக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா், பல்லாவரம் பகுதிகளில் புதிய மேம்பாலங்களை வியாழக்கிழமை திறந்து வைத்து அவா் பேசியது:-

வண்டலூா் மேம்பாலம், ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று வழிகளைக் கொண்ட சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான பணிகள், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் நிலம் கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள் இருந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இப்போது திறக்கப்பட்டுள்ளது.

பல்லாவரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புதிதாக உயா்நிலைப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்து, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.

கோயம்பேடு பாலம்: சென்னை கொரட்டூரில் நடைபெற்று வரும் சுரங்கப் பாதைப் பணிகள் 95 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன. இந்த மாத இறுதிக்குள் பாலப் பணி முழுவதும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

கொளத்தூா் மேம்பாலப் பணியில் இடதுபுற பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. இப்போது வலதுபுற பாலப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன. இது அக்டோபா் மாதத்துக்குள் திறக்கப்படும். கோயம்பேடு சந்திப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 75 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. டிசம்பா் மாதத்தில் முழு பாலப் பணிகளும் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

இதேபோன்று, மேடவாக்கம் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 85 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வேளச்சேரியிலிருந்து தாம்பரம் செல்லும் இடதுபுற பாலப் பணிகள் டிசம்பரில் நிறைவு பெற்று டிசம்பருக்குள் திறக்கப்படும். கீழ்கட்டளை மேம்பாலப் பணியும் 82 சதவீதம் முடிவடைந்துள்ளது. அதுவும் விரைவில் திறக்கப்படும்.

திருவொற்றியூா் - பொன்னேரி - பஞ்செட்டி உயா்நிலைப் பாலப் பணிகள் நடந்து வருகின்றன. வேளச்சேரி மேம்பாலப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதில், 80 சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன. டிசம்பருக்குள் பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.

தாம்பரம் நடை மேம்பாலம், குரோம்பேட்டை ரயில்வே சுரங்கப்பாதை பணிகள், பெருங்களத்தூா் ரயில்வே மேம்பாலப் பணிகள் ஆகியன விரைந்து முடிக்கப்பட்டு திறக்கப்படும். சென்னை மாநகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னைக்குள்ளும், சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்வதற்கும் தமிழக அரசு பல்வேறு பாலங்களைக் கட்டி கொடுத்து வருகிறது என்று முதல்வா் பழனிசாமி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணனும் களப்பலியானவனும்...

அருள் வழங்கும் தாமோதரப் பெருமாள்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

SCROLL FOR NEXT