சென்னை

வசிப்பிடப் பகுதியிலேயே திருமணப் பதிவு

17th Sep 2020 03:30 AM

ADVERTISEMENT

 

சென்னை: வசிப்பிடப் பகுதியிலேயே திருமணங்களைப் பதிவு செய்யும் சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது. இந்த மசோதாவை சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புதன்கிழமை தாக்கல் செய்தார். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:
திருமணங்கள் எந்தப் பகுதியில் நடைபெறுகிறதோ, அந்தப் பகுதியின் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். இந்த பதிவு முறையை எளிதாக்க, மணமகன் அல்லது மணமகள் தங்குமிடத்திலுள்ள பதிவாளரின் அலுவலகத்திலும் திருமணத்தை பதிவு செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழ்நாடு திருமணங்கள் பதிவு செய்தல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.
கூட்டுறவு சங்கங்கள்: கூட்டுறவு சங்கங்களின் நிர்வாக சபையை கலைத்து விட்டு, அதனை நிர்வகிக்க உடனடியாக செயல் ஆட்சியரை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்மூலம், கலைக்கப்படும் நிர்வாக சபையினர் கணக்கு விவரங்களை அழிப்பது போன்ற நிகழ்வுகளைத் தடுக்கலாம் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசரச் சட்டங்கள்: பெட் ரோல் மீதான வரி விதிப்பு, மின்னணு முறையில் நீதிமன்றக் கட்டணங்களைச் செலுத்துவது போன்றவை அவசர சட்டங்களாக ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டன. இப்போது பேரவை கூடியதால், அந்த அவசர சட்டங்களுக்கு அவையின் ஒப்புதலைப் பெறும் வகையில் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவையும் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT