சென்னை

உரிமை மீறல் குழு நோட்டீஸை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு: விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையீடு

17th Sep 2020 02:48 AM

ADVERTISEMENT

 

சென்னை: சட்டப் பேரவைக்குள் குட்கா பொருள்களைக் கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க கோரி முறையிடப்பட்டது.
தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருள்களை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்து சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், "உரிமை மீறல் குழு அனுப்பிய நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளன. 
இந்த நோட்டீஸின் அடிப்படையில் மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்பின்னரும், மனுதாரர்கள் அவையில் உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் கருதி, உரிமைமீறல் குழு நடவடிக்கை எடுக்க நினைத்தால், புதிதாக நோட்டீஸ் அனுப்பலாம்' என உத்தரவிட்டிருந்தது. 
 இந்த வழக்கு விசாரணை காலத்தில் திமுக எம்எல்ஏக்களான ஜெ.அன்பழகன், கே.பி.பி.சாமி ஆகியோர் இறந்து விட்டனர். கு.க.செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை மீறல் குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. அதில் கடந்த 14 - ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன் மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் மனுராஜ் முறையிட்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை விசாரணைக்குப் பட்டியலிடும்போது விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT