சென்னை

10 வயதுக்குள் பூப்படைந்தால் மார்பகப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு

29th Oct 2020 04:05 AM

ADVERTISEMENT

 

சென்னை: பத்து வயதுக்குள் பூப்படையும் சிறுமிகளுக்கு எதிர்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடந்தது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் வசந்தாமணி தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளர் மணி, மருத்துவ நிலைய அதிகாரி ஆனந்த் பிரதாப் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கினர்.

இதுகுறித்து டாக்டர் ஆனந்த் பிரதாப் கூறியதாவது: புற்றுநோய் சிகிச்சைக்காக மருந்தியல் துறை, அறுவை சிகிச்சைத் துறை, கதிரியக்கத் துறை என ஒருங்கிணந்த சிகிச்சை முறைகள் தமிழகத்திலேயே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்தான் முதன்முறையாகத் தொடங்கப்பட்டது. இன்றளவும் அத்துறைகள் சிறப்புற செயல்பட்டு வருகின்றன. ராயப்பேட்டை மருத்துவமனையில் அளிக்கப்படும் அதி நவீன சிகிச்சைகளால் புற்றுநோயாளிகளில் பலர் முழுவதுமாக நோயிலிருந்து விடுபடுகின்றனர்.

இறுதிநிலையை எட்டிய நோயாளிகளுக்குக் கூட வலி நிவாரண மையம் அமைக்கப்பட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது என்றார் அவர்.

மருத்துவமனையின் கதிரியக்கத் துறைத் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சரவணன் கூறியதாவது:

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ஆண்டுதோறும், 1,200 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில், 300 பேர் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த காலங்களில், 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது.

தற்போது அந்த நிலை மாறியுள்ளது. குறிப்பாக இளம் வயதினர் பலர் அத்தகைய பாதிப்புக்குள்ளாகின்றனர். அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 10 வயதுக்குள் பூப்படைவதும், மரபணு ரீதியான பாதிப்புகளுக்கு ஆளாவதும் கூட இளம் வயதில் மார்பகப் புற்றுநோய் வர காரணமாக அமையலாம்.

அதுமட்டுமல்லாது சரிவர தாய்ப்பால் வழங்காததும், உடல் பருமனைக் குறைக்காததும் முக்கியக் காரணங்களாக உள்ளன. ஆரம்ப நிலை பரிசோதனைகள் வாயிலாக மட்டுமே மார்பகப் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும் என்றார் அவர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT