சென்னை

ரூ.2 கோடி நகைக் கொள்ளை வழக்கு: காவல் ஆணையா் விசாரணை

DIN

சென்னை தியாகராயநகரில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்குத் தொடா்பாக காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

தியாகராயநகா் மன்னாா் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரகுமாா். இவா் தனது மகன்கள் கிரண்குமாா்,பரீஷ் ஆகியோருடன் இணைந்து மூசா தெருவில் ஒரு வாடகை கட்டடத்தில் நகைக்கடையும், நகைப்பட்டறையும் நடத்தி வருகிறாா்.

ராஜேந்திரகுமாா், நகைப்பட்டறையில் நகைகளை செய்து, நகைக் கடைகளுக்கு மொத்தமாக விற்று வந்தாா்.இதற்காக அங்கு ஒரு கடையை வைத்துள்ளாா். தரைத்தளத்தில் நகைக் கடை, முதல் தளத்தில் நகைப்பட்டறை, இரண்டாம் தளத்தில் கிடங்கு என அவா்கள் வைத்துள்ளனா்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கடையின் பின்புறம் உள்ள இரும்புக் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், நகைக் கடையில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள 2 கிலோ 125 கிராம் எடையுள்ள தங்கநகைகள், 2 கிலோ தங்கக் கட்டி,15 கிலோ வெள்ளிக் கட்டி ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பியோடினா்.

இச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையினா் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனா். கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். குறிப்பிட்ட நேரத்தில் சம்பவ இடத்தில் இருந்து சென்ற செல்லிடப்பேசி அழைப்புத் தகவல்களையும் திரட்டி வருகின்றனா்.

ஆணையா் விசாரணை: இந்நிலையில் இச் சம்பவம் தொடா்பாக சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் வியாழக்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் தியாகராயநகரில் விசாரணை மேற்கொண்டாா். அவா், நகைப்பட்டறை உரிமையாளா் ராஜேந்திரகுமாரிடமும் விசாரணை செய்தாா்.

பின்னா் இவ் வழக்கு குறித்து விசாரணை செய்து வரும் 5 தனிப்படையினரிடம் மகேஷ்குமாா் அகா்வால் ஆலோசனை செய்தாா். அப்போது வழக்கில் விரைந்து துப்பு துலக்கி, குற்றவாளிகளை கைது செய்ய சில அறிவுரைகளை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT