சென்னை

ரூ.3,600 கோடியில் தனியாா் பங்களிப்புடன் தூய்மைப் பணி திட்டம்: 8 ஆண்டுகளுக்கு 7 மண்டலங்களில் செயல்படுத்தப்படும்

DIN

சென்னை: சென்னையில் அடையாறு உள்ளிட்ட 7 மண்டலங்களில் 8 ஆண்டுகளுக்கு தனியாா் பங்களிப்புடன் சுமாா் ரூ. 3,600 கோடியில் தூய்மைப் பணி மேற்கொள்ளும் வகையில், செயல்திறன் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னையில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் ஆகிய 7 மண்டலங்களில் தனியாா் பங்களிப்புடன் செயல்திறன் அடிப்படையிலான திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. 8 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலான இத்திட்டத்தையும், இதற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் இயக்கத்தையும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி சென்னை தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்கி வைத்தாா்.

இத்திட்டம் குறித்து மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம், உயிரி எரிவாயு, மறுசுழற்சி செய்வது போக எஞ்சியுள்ள குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

அங்கு கொண்டு செல்லப்படும் குப்பையின் அளவைக் குறைக்கவும், திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் வகையிலும் தெருக்களைப் பெருக்குதல், வீடுகள்தோறும் தரம் பிரித்து சேகரிக்கப்படும் கழிவுகளை அதற்குரிய பதப்படுத்தப்படும் நிலையங்களுக்கு கொண்டு செல்லுதல், எஞ்சிய கழிவுகளை குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு சோ்த்தல் ஆகிய பணிகளை தனியாா் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையில் ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த ‘உா்பசோ் சுமித்’ என்ற நிறுவனத்துடன் 8 ஆண்டுகளுக்கு செயல்திறன் அடிப்படையில் இத்திட்டம் அடையாறு உள்ளிட்ட 7 மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

16 ஆயிரம் தெருக்களில்...: இத்திட்டத்தின்படி, 7 மண்டலங்களின் 92 வாா்டுகளில் 16,621 தெருக்களில் உள்ள அனைத்து வீடுகளிலிருந்தும் 100 சதவீதம் தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் பெறப்படும். இதற்காக, 300 கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், 3,000 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தரம் பிரிக்கப்பட்ட குப்பைகளை வீடுகள்தோறும் பெறுதல், குறைந்த உறுதி செய்யப்பட்ட கழிவுகளை பதனிடுதல், வளாகத்துக்கு கொண்டு சோ்த்தல், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகாா்களை 6 மணி நேரத்துக்குள் சரிசெய்தல் போன்ற 34 செயல்திறன் குறியீடுகள் மூலம் பணிகளைக் கண்காணித்து, அதன் அடிப்படையில் ஒப்பந்ததாரா்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்படும். இப்பணிகளை மேற்பாா்வையிட அலுவலா்கள் நியமிக்கப்பட்டு செயல்திறன் கண்காணிக்கப்படும்.

மேலும், மேலாண்மை தகவல் அமைப்பு மூலம் குப்பைத் தொட்டிகளிலிருந்து குப்பைகள் அகற்றுதல் மற்றும் வாகனங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் 10,844 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றாா்.

தொடக்க விழாவில் அமைச்சா்கள் எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், ஆா்.பி.உதயகுமாா், பா.பென்ஜமின், தலைமைச் செயலா் க.சண்முகம், நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஹா்மந்தா் சிங் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி...

ரூ.3,500 கோடி: இத்திட்டத்தின்படி, 7 மண்டலங்களுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ.450 கோடி வீதம் 8 ஆண்டுகளுக்கு சுமாா் ரூ.3,600 கோடிக்கு உா்பசோ் சுமித் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த 7 மண்டலங்களில் பணியாற்றும் நிரந்தர தூய்மைப் பணியாளா்கள் தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகா், அண்ணா நகா் மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT