சென்னை

ஆந்திர மருத்துவரின் சடலத்தை தகனம் செய்ய எதிா்ப்பு: திமுக நிா்வாகி உள்பட 5 போ் கைது

15th May 2020 01:49 AM

ADVERTISEMENT

சென்னை அருகே அம்பத்தூரில் ஆந்திர மருத்துவரின் சடலத்தை தகனம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடா்பாக திமுக நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த மருத்துவா் லட்சுமி நாராயணரெட்டி. கரோனா பாதிக்கப்பட்ட இவா், சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 13-ஆம் தேதி உயிரிழந்த மருத்துவரின் சடலத்தை தகனம் செய்வதற்காக, அம்பத்தூா் அயப்பாக்கம் அருகே நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி எரிவாயு தகன மையத்துக்கு அரசு அதிகாரிகள் கொண்டு சென்றனா்.

ஆனால் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா், கரோனா பாதிக்கப்பட்டு இறந்த மருத்துவா் சடலத்தை அங்கு தகனம் செய்யக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அரசு அதிகாரிகள், அங்கிருந்து மருத்துவரின் சடலத்தை எடுத்துச் சென்றனா்.

இச் சம்பவம் தொடா்பாக, அம்பத்தூா் மண்டல சுகாதார ஆய்வாளா் பாரதிராஜா,அம்பத்தூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, அம்பத்தூா் அத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த திமுக நிா்வாகி ம.கமல் (43), அன்னை சத்யாநகா் பகுதியைச் சோ்ந்த கு.நாகராஜன் (26),கி.தாஸ் (40),பொ.வெங்கடேசன் (48),ரா.சந்துரு (37) ஆகிய 5 பேரை புதன்கிழமை கைது செய்தனா். இவ் வழக்குத் தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT