சென்னை

மார்ச் 31 வரை அரசு மதுபானக் கடைகளை மூட வேண்டும்: டாஸ்மாக் பணியாளர்கள் கோரிக்கை

23rd Mar 2020 02:53 AM

ADVERTISEMENT

 


சென்னை: கரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதி வரை அடைக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இதுகுறித்து அச்சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கரோனா எனும் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அடைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதைப்  பாராட்டுகிறோம். டாஸ்மாக் தலைமை அலுவலகத்தின் சார்பில் வாடிக்கையாளர்களுக்கும் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டாலும் இதை அமல்படுத்த முடியாத சூழல் அனைத்துக் கடைகளிலும் நிலவி வருகிறது. ஏதாவது ஒரு வாடிக்கையாளர் மூலம் பணியாளர் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன் மூலம் அங்கு வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கும் அந்த வைரஸ் தொற்றால் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பொதுமக்கள் மற்றும் அதில் பணியாற்றும் 27 ஆயிரம் பணியாளர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், மார்ச் 31-ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் கடைகளை அடைத்து வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT