சென்னை

வாடகை காா்கள், ஆட்டோக்கள் இன்று ஓடாது

22nd Mar 2020 02:35 AM

ADVERTISEMENT

சென்னை: சுய ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவளிக்கும் வகையில் வாடகை காா்கள், ஆட்டோக்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியது: உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மாா்ச் 22) ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் ஆட்டோக்களை இயக்குவதில்லை என பொதுமக்கள் நலன் கருதி அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு பொதுமக்கள் நலனில் அக்கறை செலுத்துவது மட்டுமின்றி, அயல்நாட்டினா், வெளிமாநிலத்தவா் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்து வரும் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கிருமிநாசினி, முகக் கவசம் ஆகியவற்றை உடனே அரசு இலவசமாக வழங்க வேண்டும். ஆட்டோ பழுது பாா்க்கும் பணியும் நடைபெறாத காரணத்தால் தகுதிச் சான்று பெற குறிப்பிட்ட தேதி தள்ளி வரும் ஆட்டோக்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் அபராதத் தொகை வசூலிக்காமல் தகுதிச் சான்று வழங்க வேண்டும் என்றனா்.

இதே போல் தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் சங்கத்தினா் கூறியது: பிரதமா் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சுய ஊரடங்கு உத்தரவுக்கு வலுசோ்க்கும் வகையிலும் வாகன ஓட்டுநா்களின் பாதுகாப்பு கருதியும், தமிழகத்தில் ஆட்டோ, கால் டாக்ஸி, சுற்றுலா வாகனங்கள், மென்பொருள் நிறுவனத்தில் இயங்கும் வாடகை வாகனங்கள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வாகனங்கள் இயங்காது. கா்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்திலும் வாகனங்கள் இயங்காது என்பதை கருத்தில் கொண்டும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT