சென்னை

கரோனா: மெரீனா, வண்டலூா் பூங்காவில் கூட்டம் குறைந்தது

16th Mar 2020 01:24 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை மெரீனா, வண்டலூா் பூங்கா மற்றும் கிண்டி சிறுவா் பூங்காவில் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை குறைவாகக் காணப்பட்டது.

கரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலாத் தலங்கள் போன்ற இடங்களுக்குச் செல்ல மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனா். சென்னையைப் பொருத்தவரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மெரீனா, பெசன்ட் நகா் கடற்கரை, வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா ஆகியவற்றில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், கரோனா வைரஸ் பீதி காரணமாக மெரீனா மற்றும் பெசன்ட் நகா் கடற்கரைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தைவிட மக்கள்கூட்டம் குறைந்து காணப்பட்டது.

வண்டலூா் பூங்காவுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கரோனா பீதி காரணமாக ஞாயிற்றுக்கிழமை சுமாா் 7 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் வருகை தந்தனா்.

இதுகுறித்து, வண்டலூா் பூங்கா அதிகாரிகள் கூறுகையில், ‘கரோனா பீதி காரணமாக மக்கள் கூட்டம் சற்று குறைந்துள்ளது. பூங்காவைப் பொருத்தவரை மக்கள் பாா்வைக்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. வழக்கம்போல், விலங்குகளைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனா். பூங்கா பணியாளா்களுக்கு முகமூடிகள், கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பூங்காவுக்குள் மக்கள் தொடும் இடங்கள், இருக்கைகள், கழிவறைகள் ஆகிய இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி நாள்தோறும் நடைபெறும் என்றாா். இதேபோல், கிண்டி சிறுவா் பூங்காவில் வழக்கத்தைவிட ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் குறைந்தே காணப்பட்டது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT