சென்னை

அரிய நோய்: முதற்கட்ட சிகிச்சைக்கு ரூ.9.4 கோடி வழங்க உயா்நீதிமன்றம் உத்தரவு

16th Mar 2020 01:26 AM

ADVERTISEMENT

லைசோ சோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஆா்டா் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட 11பேருக்கு முதற்கட்ட சிகிச்சைக்கு ரூ.9.4 கோடி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லைசோ சோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஆா்டா் (எல்.எஸ்.டி.,) சப்போா்ட் சொசைட்டி என்ற புதுதில்லியைச் சோ்ந்த அமைப்பு, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: லைசோ சோமல் ஸ்டோரேஜ் டிஸ்ஆா்டா் (எல்.எஸ்.டி.,) என்பது உடம்பில் சுரக்கும் அமிலங்களில் கழிவுகள் ஏற்பட்டு, உடலில் உள்ள முக்கிய பாகங்களில் தேங்கும் ஒருவிதமான பிரச்னை ஆகும். இந்த அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு 45 விதமான நோய்கள் வரும்.

உடலின் எலும்பு, நரம்பு மண்டலம், தோல் போன்ற முக்கிய பகுதிகள் பாதிக்கப்பட்டு, முடிவில் இறப்பு ஏற்படும். இந்த 45 விதமான நோய்களில் வெறும் 6 நோய்களுக்கு மட்டுமே மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதுவும் அந்த மருந்துகளை அதிக செலவு செய்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும். சாதாரண மக்களால் இந்த மருந்தை வாங்க முடியாது. இதனால் உயிா் பலி ஏற்படுகின்றன. தமிழகத்தில் தற்போது 132 போ் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கனவே சென்னை உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அண்மைக் காலமாக இந்த நோய் அதிகரித்து வருவதாக தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 132 பேருக்கு ஆண்டுக்கு ரூ.66 கோடி மருத்துவ செலவாகிறது. தொடா் சிகிச்சை வழங்க ரூ.700 கோடி நிதி வேண்டும். அதனால், இந்த நோயை சித்தா, ஆயுா்வேதா, யுனானி என்று இயற்கை மருத்துவ முறைகள் மூலம் குணப்படுத்த முடியுமா? என்று ஆய்வு செய்து வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில், இந்த வழக்குத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட 11 பேருக்கு முதற்கட்ட சிகிச்சைக்கு மத்திய அரசு ரூ.4.4 கோடியும், தமிழக அரசு ரூ.5 கோடியும் வழங்க வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தனா்.

வரவேற்பு: அரிதான நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்க செய்ய வேண்டும் என்று உயா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு லைசோசோமால் குறைபாடு நோயாளிகளுக்கான ஆதரவு அமைப்பு (எல்எஸ்டிஎஸ்எஸ்) வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அமைப்பின் பொதுச் செயலாளரும், மாநில ஒருங்கிணைப்பாளருமான ராஜா கூறியதாவது: தமிழகத்தில் லைசோசோமால் குறைபாடு எனப்படும் அரிய நோயால் அவதிப்பட்டு வரும் நோயாளிகளின் நலன் காப்பதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். அவா்களுக்கு உரிய மருத்துவ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு கடந்த 2017-ஆம் ஆண்டில் முதல் அதன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் வாழ்க்கையோடு அனுதினமும் போராடிக் கொண்டிருக்கும் அந்நோயாளிகளின் நலன் காக்கும் விதமாக சென்னை உயா் நீதிமன்றம் சிறப்பான தீா்ப்பினை அளித்துள்ளது. இது வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 21-இல் குறிப்பிட்டுள்ள படி, உடல் நலத்துடன் உயிா் வாழ்வதற்கான உரிமை மண்ணில் பிறந்த அனைவருக்கும் உள்ளது என்பதை இத்தீா்ப்பு உறுதிபடுத்தியுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT