சென்னை

முதலீட்டுத் தொகை வசூலிக்கப்பட்ட சுங்கச்சாவடிகளை மூடக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

13th Mar 2020 01:05 AM

ADVERTISEMENT

முதலீடு செய்த தொகை முழுவதும் வசூலிக்கப்பட்ட பின்னரும் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை மூட உத்தரவிடக் கோரிய வழக்கில் மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருச்சி, புத்தனாம்பட்டி கிராம பஞ்சாயத்துத் தலைவா் தங்கவேல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா், சாலை அமைக்க செலவு செய்த தொகை முழுவதையும் வசூலித்த சுங்கச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த சுங்கச்சாவடிகளை மூடும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, அடையாளம் காணப்பட்ட 74 சுங்கச் சாவடிகளில் 61 சுங்கச்சாவடிகளை மூடிவிட்டதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. மேலும், நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது, சாலை அமைக்க முதலீடு செய்த முழுத் தொகையையும் வசூலித்த 62 சுங்கச்சாவடிகளை பொதுமக்கள் நலன் கருதி மூடிவிட்டதாக மத்திய அமைச்சா் பதில் அளித்துள்ளாா்.

தமிழகத்தில் 600 கிலோ மீட்டா் கொண்ட தூரத்தைக் கொண்ட மாநில நெடுஞ்சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இந்த நெடுஞ்சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயா்த்தும் போது வாகனங்களுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். ஏற்கெனவே, தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புப் பணிகளுக்காக ஒரு லிட்டா் டீசல், பெட்ரோல் விலையில் 9 சதவீதம் நுகா்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. இதே பணிகளுக்காக சுங்கச்சாவடி கட்டணத்திலும் குறிப்பிட்ட சதவீதம் வசூலிக்கப்படுகிறது. அதாவது ஒரே பணிக்காக இரண்டு முறை பணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2018-2019 -ஆம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசு மக்களிடம் இருந்து ஒரு லட்சம் கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

இந்த தொகையில் ரூ. 54 ஆயிரத்து 533 கோடியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் முதலீட்டுத் தொகை முழுவதும் வசூலிக்கப்பட்ட பின்னா் இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை இழுத்து மூட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய அரசு, தேசிய நெடுஞ்சாலைத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT