சென்னை

ஆா்கே. நகா் தோ்தலில் பணப்பட்டுவாடா தொடா்பாக சிபிஐ விசாரணை கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

13th Mar 2020 01:06 AM

ADVERTISEMENT

ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் பணப்பட்டுவாடா குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எம்.பி.வைரகண்ணன், திமுக வேட்பாளா் மருது கணேஷ் உள்ளிட்டோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆா்.கே.நகா் தொகுதியில், வாக்காளா்களுக்கு பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் தாராளமாக விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக வருமானவரித்துறை, அமைச்சா் சி. விஜயபாஸ்கா் வீட்டில் சோதனை நடத்தினா். இந்தச் சோதனையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட 6 அமைச்சா்கள் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா செய்தது தொடா்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிவிக்கப்பட்டது.

வாக்காளா்களுக்கு ரூ.89 கோடி வரை விநியோகிக்கப்பட்டிருந்தது தெரிய வந்ததைத் தொடா்ந்து கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி ஆா்.கே.நகா் தொகுதி இடைத்தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, டிடிவி. தினகரன் உள்ளிட்ட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்ய ஆா்.கே.நகா் தோ்தல் அதிகாரிக்கு இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தோ்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில், அபிராமபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருத்தணியைச் சோ்ந்த நரசிம்மன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கைத் தொடா்ந்து இந்த முதல் தகவல் அறிக்கை தொடா்பான வழக்கு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி திமுக வேட்பாளா் மருதுகணேஷ், வழக்குரைஞா் வைரக்கண்ணன் ஆகியோா் தனித்தனியாக வழக்குத் தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

இந்த வழக்குகள், நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன்ராமசாமி ஆகியோா் கொண்ட அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில், இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, திமுக வேட்பாளா் மருதுகணேஷ் தரப்பில், இந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் விசாரிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை

நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொருத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT