சென்னை

2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி: நிலம் வழங்கியது பள்ளி நிர்வாகம்

2nd Mar 2020 05:03 AM

ADVERTISEMENT


சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிக்காக சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் உள்ள குட் ஷெப்பர்டு பள்ளி நிர்வாகம் நிலம்  வழங்கி உதவியுள்ளது. 
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. 
முதல்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை வரை இரண்டாம் வழித்தடத்திலும் மொத்தம் 45 கி.மீ. தூரத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 98 ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். 
இதற்கிடையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் கடந்த ஆண்டு தொடங்கியது. இரண்டாம் கட்ட  திட்டப் பணிகள் 118.9 கி.மீ. தூரத்துக்கு நடைபெறவுள்ளன. மாதவரம்-சிப்காட் இடையில் 3-ஆவது வழித்தடம் ( 45.8 கி.மீ), கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி பைபாஸ் வரை 4-ஆவது வழித்தடம் ( 26.1 கி.மீ.), மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 5-ஆவது வழித்தடம் (47 கி.மீ.) அமையவுள்ளன.  மொத்தமாக 128 ரயில் நிலையங்கள் இந்த மூன்று வழித்தடங்களிலும் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, வழித்தடம் 3-இன் பணிகளுக்காக நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் அமைந்துள்ள குட் ஷெப்பர்டு பள்ளி நிர்வாகத்தினரிடமிருந்து 17 ஆயிரத்து 495 சதுர அடி நிலம் மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு தேவைப்பட்டது. எனவே, இதை பெறுவதற்கு பள்ளி நிர்வாகத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, நிலத்தை வழங்க பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது. 
இதையடுத்து, இந்த நிலத்திற்குரிய இழப்பீட்டு தொகைக்கான  காசோலையை பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் (இயக்கம் மற்றும் அமைப்புகள்) நரசிம் பிரசாத் வெள்ளிக்கிழமை வழங்கினார். 
மேலும், மிக நீண்ட நிலம் எடுப்பு சட்டநடைமுறையைப் பின்பற்றுவதைவிட எளிய நேரடி பேச்சுவார்த்தை மூலமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு நிலத்தை தர நில உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT