சென்னை

கழிவு நீரால் மாசடையும் அம்பத்தூர் ஏரி

2nd Mar 2020 05:32 AM

ADVERTISEMENT

 

சென்னை: வீடுகளில் இருந்து நேரடியாக கலக்கப்படும் கழிவு நீரால் மாசடைந்து வரும் அம்பத்தூர் ஏரியைப் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர் மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் 25-க்கும்  மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இதில், அதிக பரப்பளவு கொண்டது அம்பத்தூர் ஏரி. தொடக்கத்தில் 600 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்பட்ட இந்த ஏரி,  ஆக்கிரமிப்புகளால் தற்போது சுமார் 400 ஏக்கராக சுருங்கி உள்ளது. 

பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியைச் சுற்றி அம்பத்தூர், திருமுல்லைவாயில் பகுதிகளான சிவானந்தா நகர், எம்.கே.பி. நகர், உழைப்பாளர் நகர், டீச்சர்ஸ் காலனி, சத்தியா நகர், டி.ஜி. அண்ணா நகர், எம்.ஜி.ஆர். புரம், இந்திரா நகர், சத்தியபுரம், திருவேங்கட நகர், அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய இடங்கள் அமைந்துள்ளன.

ADVERTISEMENT

இதில், குறிப்பாக அம்பத்தூர், திருமுல்லைவாயல், அயப்பாக்கம் பகுதிகளை ஒட்டிய ஏரிக் கரையை முழுமையாக ஆக்கிரமித்து வீடுகள், கடைகள், ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன.

அம்பத்தூர் ஏரியைப் பாதுகாக்கும் வகையில், ஏரியின் கரையைச் சுற்றிலும் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சி பாதை அண்மையில் அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கான முறையான பாதுகாப்பான  ஏற்பாடுகள் இல்லாததால், மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதைத் தொடர்ந்து,  அம்பத்தூர்-அயப்பாக்கம் வரையிலான ஏரிப் பகுதியில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுப் பணித் துறையினர் எடுத்து வருகின்றனர்.

கழிவுநீர் கலப்பு: இந்நிலையில், அயப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வீடுகளில் இருந்தும், பாதாளச் சாக்கடையில் இருந்தும் நேரடியாக கழிவு நீர் அம்பத்தூர் ஏரியில் கலக்கப்படுவதால் மாசடைந்து வருகிறது. இதுகுறித்து அம்பத்தூர் ஏரி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் என்பவர் கூறுகையில், "அம்பத்தூர், அயப்பாக்கம், திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக அம்பத்தூர் ஏரி விளங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால் இந்த  ஏரியின் நிலப்பரப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.  


ஏரியைச்  சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை  அதிகாரிடம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாகவே உள்ளனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி சிலர் தொடர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை, கழிவுகள் ஏரியில் விடப்படுவதால், நிலத்தடிநீர் மாசடைந்து வருகிறது. எனவே, இனி மேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்பத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர் வரத்து கால்வாய்கள், உபரி நீர் கால்வாய்களில் சீரமைக்கவும், கழிவுநீர், குப்பைகள் கலப்பதைத் தடுக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT