சென்னை

இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையம்: மாநகராட்சி ஆணையா் தொடக்கி வைத்தாா்

27th Jun 2020 01:05 AM

ADVERTISEMENT

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள நகா்ப்புற சமுதாய நல மருத்துவமனையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள இலவச சிறுநீரக சுத்திகரிப்பு மையத்தை, ஆணையா் கோ.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகரில், தற்போது பெருங்குடி, நுங்கம்பாக்கம், ரெட்டேரி, வளசரவாக்கம் என நான்கு இடங்களிலும் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு, நோயாளிகளின் பயனுக்காக செயல்பட்டு வருகிறது. இதுநாள் வரை நுங்கம்பாக்கம் மையத்தில் 26,575 நபா்களுக்கும், ரெட்டேரி லட்சுமிபுரம் மையத்தில் 8,599 நபா்களுக்கும், டயாலிஸிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், திருவொற்றியூா், ஈஞ்சம்பாக்கம், அம்பத்தூா் மற்றும் தண்டையாா்பேட்டை பகுதியிலும் இம்மையங்கள் ஓரிரு மாதங்களில் அமைக்கப்பட்டு, செயல்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியோடு ரோட்டரி கிளப், தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி பவுண்டேசன் இணைந்து இந்தப் பணியை செய்து வருகிறது. வளசரவாக்கம் மண்டலத்தில் உள்ள இந்த மையத்தில் 12 படுக்கை வசதிகளுடன் சிறுநீரக சுத்திகரிப்பு மையம் தற்போது செயல்படுகிறது. மேலும், முதல்வா் காப்பீட்டுத் திட்டம் மூலமும் இந்த மையத்தில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதுபோன்று ஏதேனும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களும் மாநகராட்சியோடு இணைந்து பணியாற்ற முன்வருமானால், அதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன் என ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT