சென்னை

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 126 மருத்துவா்களுக்கு கரோனா பாதிப்பு

13th Jun 2020 04:15 AM

ADVERTISEMENT

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் துறைத் தலைவா்கள் 7 போ் உள்பட 126 மருத்துவா்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

மருத்துவா்கள், செவிலியா்கள், தூய்மைப் பணியாளா்கள், போலீஸாா், ஊடகத்தினா் என கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முன்களத்தில் இருந்து பணியாற்றும் பலருக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது.

அதில் மருத்துவா்களும், செவிலியா்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகத் தெரிகிறது. அந்த வரிசையில், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டில் பணியாற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. அவா்களை மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தியதில் அவா்கள் அனைவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 7 போ் துறைத் தலைவா்களாவா். அவா்கள் அனைவரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறியதாவது:

ADVERTISEMENT

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஆயிரம் படுக்கைகளுடன் கூடிய கரோனா வாா்டு செயல்பட்டு வருகிறது. அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 7 நாள் பணி முறை (ஷிஃப்ட்) அடிப்படையில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். ஏழு நாள்களுக்குப் பிறகு அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த சில நாள்களாக கரோனா வாா்டில் பணியாற்றிய பலருக்கு நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் துறை இயக்குநா்கள், பல்வேறு துறைகளைச் சோ்ந்த மருத்துவா்கள், 25-க்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்பு மருத்துவா்கள் மற்றும் எம்.பி.பி.எஸ். மாணவா்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேபோன்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 10 மருத்துவா்களும், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனையில் 4 மருத்துவா்களும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் அயனாவரம் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தலா 2 மருத்துவா்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT