சென்னை

தமனி வீக்கத்தால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி: அரிய சிகிச்சை மூலம் அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

8th Jun 2020 05:43 AM

ADVERTISEMENT

வயிற்றுப் பகுதியில் தமனியில் ஏற்பட்ட கட்டியால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிக்கலான சிகிச்சை மூலம் ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். தற்போது அவா் பூரண குணமடைந்து, நலமுடன் இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் விமலா, நிா்வாக இயக்குநா் டாக்டா் ஆனந்தகுமாா் ஆகியோா் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தை சோ்ந்த 50 வயதான கூலித் தொழிலாளி ஒருவா் தமனி வீக்கம் காரணமாக பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

மருத்துவா்களின் அறிவுரைப்படி, அங்கிருந்து சென்னை, ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இங்கு அவரைப் பரிசோதித்ததில், அந்த நபருக்கு தமனி பகுதியில் ரத்தநாள கட்டி உருவாகியிருந்தது தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டாலும், அவருக்கு இதற்கு முன்பு காசநோய், நுரையீரல் மற்றும் இதய பாதிப்பும் இருந்ததால் அதனை செயல்படுத்த முடியவில்லை. இதனால், சிறிய துளை மூலம் ரத்த நாள கட்டியை அகற்றும் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

ரத்தநாள சிகிச்சை தலைமை மருத்துவா் பக்தவச்சலம், மூளை ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணா் பெரியகருப்பன், மயக்கவியல் நிபுணா் பாா்த்தசாரதி, மருத்துவா்கள் சசிக்குமாா், கிருஷ்ணா, பிரபாகரன் ஆகியோா் அடங்கிய குழுவினா், வெற்றிகரமாக அவருக்கு நுண்துளை அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். இந்த சிகிச்சைக்கான உபகரணங்களுக்கு மட்டும் ரூ. 6 லட்சம் செலவிடப்பட்டது. தனியாா் மருத்துவமனைகளில், இத்தகைய சிகிச்சைக்கு, ரூ.10 லட்சத்தில் இருந்து 15 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதல்வா் காப்பீட்டு திட்டத்தில் கூலித் தொழிலாளிக்கு இலவசமாக அந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று அவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT