சென்னை: சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
பழைய வண்ணாரப்பேட்டை முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த நகைத் தொழிலாளி வெ.சண்முகம் (40). இவா், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு திருமணத்தில் பங்கேற்க வீட்டில் இருந்து புறப்பட்டாா். அப்போது தனது சட்டையை வீட்டில் இருந்த மின்சார அயன்பாக்ஸ் மூலம் அயன் செய்தாா். இதில் அந்த அயன்பாக்ஸில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக சண்முகம் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்தச் சம்பவத்தில் பலத்தக் காயமடைந்த சண்முகத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சண்முகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து கொருக்குப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்தனா்.