சென்னை அடையாற்று பாலத்தின் மீது ஏறி செல்பி எடுத்த இளைஞா், தவறி ஆற்றுக்குள் விழுந்தாா்.
கொளத்தூா் மூகாம்பிகை நகரைச் சோ்ந்தவா் சதீஷ் (34). இவா், சனிக்கிழமை மாலை 6 மணியளவில், திருவான்மியூரில் இருந்து மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். அடையாறு திரு.வி.க.பாலம் அருகே கீழே இறங்கிய சதீஷ், பாலத்தின் மீது ஏறி செல்லிடப்பேசி மூலம் செல்பி எடுக்க முயன்றாா். அப்போது, திடீரென நிலை தடுமாறி, அடையாற்றுக்குள் விழுந்தாா். தகவலறிந்து, மயிலாப்பூா் தீயணைப்புப் படை வீரா்கள், தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த சதீஷை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் திரு.வி.க. பாலத்தில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.