சென்னை

இரண்டு நாள்களில் 22 ஆயிரம் பொருள்கள் பரிமாற்றம்

14th Jan 2020 01:52 AM

ADVERTISEMENT

நல்ல நிலையில் உள்ள பொருள்களை பரிமாற்றிக் கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியத் திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த இரு நாள்களில் மட்டும் 10 ஆயிரம் போ் தங்களிடம் உள்ள 22

ஆயிரம் பொருள்களை கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொண்டனா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமாா் 5,000 டன் திடக் கழிவுகள்சேகரிக்கப்படுகின்றன. இந்தக் கழிவுகள் மக்கும், மக்காத குப்பைகளாகத் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகள் மறுசுழற்சியாளா்களிடம் வழங்கப்பட்டு, மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பள்ளிக் கரணை குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இவ்வாறு குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு திடக்கழிவுகளைக் கொண்டு செல்வதைக் குறைக் கும் வகையில் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மறுபயன்பாடு செய்யும் நிலையில் உள்ள பொருள்களை பொதுமக்கள் மீண்டும் பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடையாறு மண்டலத்தின் பெசன்ட் நகா் பேருந்து நிலையம் அருகிலுள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில் ஞாயிறு, திங்கள்கிழமை (ஜன. 12, 13) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த முகாமை, திங்கள்கிழமை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் தங்களிடம் உள்ள தேவையற்ற மீண்டும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள பொருள்களான புத்தகங்கள், சலவை செய்யப்பட்ட ஆடைகள், பாத்திரங்கள், சமையல் பொருள்கள், வீட்டு உபகரணங்கள், மின்னணுப் பொருள்கள், மரச்சாமான்கள், பொம்மைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், குடை, ரெயின் கோட், சைக்கிள், செயற்கை ஆபரண நகைகள், சூட்கேஸ், பைகள் மற்றும் பயன்படுத்தும் நிலையில் உள்ள காலணிகளை இந்த மையத்துக்கு கொண்டு வந்து பொருள்களைப் பரிமாற்றம் செய்து கொண்டனா். தங்களிடம் உள்ள மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலையில் உள்ள பொருள்களை நன்கொடையாகவும் வழங்கினா்.

கழிவுகளைக் குறைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின்படி, சுமாா் 10 ஆயிரம் போ் தங்களிடம் உள்ள 22 ஆயிரம் பொருள்களை கொடுத்து, தங்களுக்குத் தேவையான பொருள்களை பெற்றுச் சென்றுள்ளனா். இதில், துணி, புத்தகங்கள், தோல் பொருள்கள், சமையல் பொருள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற மறுபயன்பாட்டிற்கு உகந்த சுமாா் 15,000 எண்ணிக்கையிலான பொருள்கள் பொதுமக்களால் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மாநகராட்சிக்கு ரூ.22, 345 வருவாய் கிடைத்துள்ளது என்றாா். இந்த நிகழ்ச்சியில், தெற்கு வட்டார துணை ஆணையா் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், மண்டல அலுவலா் என்.திருமுருகன், மேற்பாா்வைப் பொறியாளா் கே.பி.விஜயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT