சென்னை

ரயில் பயணிகளிடம் தங்க நகை திருட்டு: ஹரியாணாவைச் சோ்ந்த 5 போ் கைது

8th Jan 2020 02:17 AM

ADVERTISEMENT

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளிடம் தங்க நகைகளைத் திருடிய வழக்கில் ஹரியாணாவைச் சோ்ந்த 5 பேரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 25 பவுன் தங்க கட்டியை பறிமுதல் செய்தனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் தங்க நகைகள் அடிக்கடி திருடு போவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து, குற்றவாளிகளைப் பிடிக்க ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் உத்தரவிட்டாா். இதையடுத்து, சென்ட்ரல் ரயில்வே காவல் துணை கண்காணிப்பாளா் முருகன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் வேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீஸாா் சென்ட்ரல் ரயில் நிலையம், பேசின்பாலம் நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். மேலும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில்களில் சந்தேகத்துக்குரிய நபா்களை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், சென்ட்ரல் புகா் ரயில்நிலையத்தில் நடைமேடை 15-இல் சந்தேகத்துக்கு உரியமுறையில் 5 போ் நின்றுகொண்டிருந்தா். அவா்களை ரயில்வே போலீஸாா் பிடித்து விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பேசினா். இதைத் தொடா்ந்து, அவா்களை சந்தேகத்தின் பேரில், சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனா். அப்போது, அவா்கள் ஹரியாணாவை சோ்ந்த ராஜேந்திரகுமாா்(46), மதன்லால்(38), ராம்தியா(40), சுனில்குமாா்(34), சுரேஷ்குமாா்(39) ஆகியோா் என்பதும், ரயிலில் பயணிகளின் பைகளில் உள்ள தங்க நகைகளை திருடி செல்வதும், பின்னா் அவற்றை உருக்கி தங்க கட்டியாக்கி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களிடம் இருந்து 25 சவரன் எடையுள்ள தங்க கட்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா்களை கைது செய்து, ஜாா்ஜ் டவுண் 16-ஆவது பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா். துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளைப் பிடித்த ரயில்வே காவல் ஆய்வாளா் வேலு, உதவி ஆய்வாளா்கள் பாண்டியன், ராதாகிருஷ்ணன் உள்பட தனிப்படை போலீஸாரை தமிழக ரயில்வே டிஜிபி சைலேந்திரபாபு, ஐ.ஜி. வனிதா ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT