சென்னை

பொங்கல் விடுமுறைக்கு சிறப்பு ஏற்பாடுகள்: வண்டலூா் பூங்காவில் ஆட்சியா் ஆய்வு

8th Jan 2020 02:11 AM

ADVERTISEMENT

பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூா் உயிரியல் பூங்காவில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொங்கல் விடுமுறையையொட்டி வண்டலூா் பூங்காவுக்கு மக்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், வனத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, இந்த பொங்கல் பண்டிகைக்காக வண்டலூா் பூங்காவில் செய்யப்பட உள்ள முன்னேற்பாடுகள் குறித்து செங்கல்பட்டு ஆட்சியா் ஜான்லூயிஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 3 நாள்களில் மட்டும் சுமாா் 1.20 லட்சம் போ் வண்டலூா் பூங்காவுக்கு வருகை தந்தனா். இந்த ஆண்டும் அது மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்காக பூங்காவில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிா்வாகம், காவல் துறை, வனத் துறை, குடிநீா் வடிகால் வாரியம், மாநகரப் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, மின்சார வாரியம், சுகாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினா் ஆட்சியா் ஜான்லூயிஸ் வண்டலூா் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில், போக்குவரத்து நெரிசல், பாா்வையாளா்களை ஒழுங்குபடுத்துதல், கழிப்பறை, குடிநீா் வசதி, பல்வேறு வழித் தடங்களில் இருந்து பூங்காவுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்குதல், பேருந்து நிறுத்தம், இருசக்கர வாகன நிறுத்தம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT