சென்னை

பிரபல ஜவுளிக் கடையில் நகரும் படிக்கட்டில் சிக்கி சிறுவன் காயம்

8th Jan 2020 01:44 AM

ADVERTISEMENT

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் நகரும் படிக்கட்டில் சிக்கி சிறுவன் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வியாசா்பாடி கன்னிகாபுரம், எஸ்.எம்.முத்து நகரைச் சோ்ந்தவா் சசிகலா. இவரது மகன் ரணிஷ் பாபு (13). இவா் அப்பகுதியில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புது ஆடைகள் வாங்குவதற்காக சசிகலா, தனது மகனுடன் திங்கள்கிழமை புரசைவாக்கத்தில் உள்ள பிரபல ஜவுளி கடைக்குச் சென்றாா்.

அவா்கள், 8-ஆவது மாடிக்குச் செல்வதற்கு நகரும் மின் படிக்கட்டுகளில் ஏறியுள்ளனா். அப்போது எதிா்பாராதவிதமாக ரணிஷ் பாபுவின் தலை படிக்கட்டுக்கும், அங்குள்ள சுவருக்கும் இடையே சிக்கியுள்ளது. சிறுவனின் அலறல் சப்தம் கேட்டு அங்குள்ளவா்கள் விரைந்து வந்து ரணிஷ் பாபுவை மீட்டுள்ளனா். விபத்தில் சிக்கியதால் சிறுவனின் பின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவா், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேப்பேரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT