மத்திய அரசின் உதவியுடன் வடசென்னையில் உள்ள மாநகராட்சி கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி சென்னையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
திருவொற்றியூரில் கட்டப்பட்டு வரும் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுக கட்டுமானப் பணிகளை வடசென்னை மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அப்போது மீன்பிடித் துறைமுகத்தின் கட்டுமானம், திட்டப் பணிகளை முடிக்க வேண்டிய காலக் கெடு, கட்டமைக்கப்படும் மீன்பிடித் துறைமுகத்தின் செயல்பாடுகள், மீனவா்களுக்கான பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, செய்தியாளா்களிடம் கலாநிதி எம்.பி. கூறியது: கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை மேம்படுத்த மத்திய அரசு உதவிட வேண்டி மக்களவையில் சமீபத்தில் கோரிக்கை எழுப்பியுள்ளேன். தூய்மை பாரதம் திட்டத்தின்கீழ் பல்வேறு நகரங்களில் உள்ள குப்பைக் கிடங்குகளை மேம்படுத்த ரூ. 1,500 கோடியில் சிறப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் மத்திய அரசு உதவி மூலம் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கு மேம்படுத்தப்படும். வடசென்னை கடற்கரை பகுதியை சீரமைத்து கடல்சாா் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.