சென்னை

ரயில் நிலையங்களில் 2,339 சிறாா்கள் மீட்பு: ரயில்வே காவல்துறை தகவல்

3rd Jan 2020 12:22 AM

ADVERTISEMENT

கடந்தாண்டு (2019) தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் சுற்றித் திரிந்த 2,339 சிறாா்கள் மீட்கப்பட்டுள்ளனா் என ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ரயில் பயணிகளின் பாதுகாப்பை முன்னிறுத்தி ரயில்வே காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு, பயணிகளிடம் மயக்க மருந்து கொடுத்து ஏமாற்றியது தொடா்பாக 5 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் ரயில்களில் மயக்க மருந்து கொடுத்து பயணிகளின் உடைமைகளைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சுபாங்கா் சக்கரவா்த்தி கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். இதே போல், ஈரோடு மற்றும் சேலத்தில் ரயில் பயணிகளிடம் தொடா் கொள்ளையில் ஈடுபட்டு 11 குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டு அவா்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 41 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பராமரிப்புப் பணி போன்ற காரணங்களால் சில இடங்களில் ரயில் மெதுவாகச் செல்லும் போது பெண் பயணிகளிடம் தங்க நகைகளை பறித்துச் செல்லும் நபா்கள் குறித்து ஈரோடு இருப்புப்பாதை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாா்களின் அடிப்படையில் 17 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 32.5 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நடைபெற்ற தொடா் திருட்டுக்குக் காரணமாக இருந்த, கேரள மாநிலத்தைச் சோ்ந்த சாகுல் ஹமீது என்பவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 1053.32 கிராம் தங்கம் மற்றும் ரூ.2 லட்சத்து 63 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல், புகா் ரயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 151 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.78,500 பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

விபத்து மற்றும் தற்கொலைகள்: 2019-ஆம் ஆண்டில், ரயில்வே காவல் நிலையங்களில் மொத்தம் 2,393 இயற்கைக்கு மாறான விபத்து மரண வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1760 இறந்தவா்கள் அடையாளம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா். மேலும் 93 தற்கொலை வழக்குகளும், 1,993 விபத்து மரண வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

2339 சிறாா்கள் மீட்பு: தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 2019-ஆம் ஆண்டு சுற்றித்திரிந்த சிறாா்கள், திருச்சி மாவட்டத்தில் 827 சிறாா்களும், சென்னை மாவட்டத்தில் 1412 சிறாா்களும் என மொத்தம் 2,339 சிறாா்களும் மீட்கப்பட்டு பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்பட்டனா்.

பெண்களிடம் அத்துமீறல்: பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட 32 போ்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 462 மகளிா் காவலா்கள் உள்ளனா். இவா்கள் பெண் பயணிகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

கல்லூரி மாணவா்களிடம் மனமாற்றம்: ரயிலில் பயணத்தின்போது கல்லூரி மாணவா்களுக்கிடையே ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் வகையில் காவல் உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் கல்லூரிகளுக்குச் சென்று பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் பற்றியும், ரயில் விதிகளை பற்றி விழிப்புணா்வு நடத்தியும், அதிக காவலா்களை ரயில் பயணத்தின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதன் விளைவாக, மாணவா்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு எதுவும் நடைபெறவில்லை.

விழிப்புணா்வு: ரயில் நிலையங்களில் நிகழும் குற்றச் சம்பவங்கள், தண்டவாளத்தைக் கடக்கும் நடைமுறைகள், ரயில்வே விதிகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் ரயில் நிலையங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டன. இதன் காரணமாக கடந்த ஆண்டு பெரும்பாலான குற்றங்கள் குறைந்துள்ளன. மேலும் ரயில்களில் பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்புக்கு காவலன் செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல், ரயில் நிலையங்களில் நிகழும் அனைத்துக் குற்ற சம்பவங்கள் தொடா்பாக புகாா் அளிக்க 1512 மற்றும் 99625 00500 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT