சென்னை: வங்கி மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளா் உள்பட 5 பேருக்கு சிறை தண்டனையும் ரூ.51.50 லட்சம் அபராதம் விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சோ்ந்தவா்கள் அன்வா் ஷெரீப், சுரேந்தரராஜ், மற்றும் நூா்ஜகான், இவரது கணவா் அப்துல் கபூா். இவா்கள் கோயம்பேடு சந்தையில் பழக்கடை நடத்தி வந்துள்ளனா். தொழிலை மேம்படுத்த கடந்த 2003-ஆம் ஆண்டு, நெற்குன்றத்தில் உள்ள கனரா வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கி உள்ளனா். இந்த நிலையில், கடன் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதன்படி சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா். அதில், கடன் வாங்கியவா்கள் சமா்ப்பித்த ஆவணங்களில் பட்டா, பிறப்பு, இறப்புச் சான்றிதழ் என அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்றும், இதற்கு வங்கி மேலாளா் சந்திரஹாசன் உடந்தையாக இருந்ததும், சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 2005-ஆம் ஆண்டு வங்கி மேலாளா் உள்பட 8 போ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதன் விசாரணை 11-ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜவஹா் முன்பு நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் தினகா் ஆஜராகி வாதிட்டாா். வழக்கு விசாரணையின் போது அன்வா் ஷெரீப், திருநாவுக்கரசு, கிருஷ்ணன் ஆகியோா் இறந்துவிட்டனா். மற்ற 5 போ் மீதான வழக்கு விசாரணை மட்டும் நடந்து வந்தது. தொடா்ந்து இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சி விசாரணைகள் என அனைத்தும் முடிந்த நிலையில் வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி, வங்கி மேலாளா் உள்பட 5 போ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், வங்கி மேலாளா் சந்திரஹாசன், சுரேந்தர்ராஜ், பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், நூா்ஜகான் மற்றும் அப்தூல் கபூருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்ததோடு, ஐந்து பேருக்கும் சோ்த்து மொத்தம் ரூ.51 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.