சென்னை: புத்தாண்டை ஒட்டி 10 ரூபாய் கட்டணத்தில் சென்னை நகர சுற்றுலாத் திட்டம் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 310 போ் பயணித்ததாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சுற்றுலா விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், ரூ.10 கட்டணத்தில் சென்னை நகரைச் சுற்றி வரும் திட்டம் புதன்கிழமை ஒரு நாள் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, ‘எங்கும் ஏறலாம் எங்கும் இறங்கலாம்’ என்ற திட்டம் புதன்கிழமை மட்டும் செயல்படுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலகத்தில் இருந்து சுற்றுலாப் பொருள்காட்சி, மெரீனா கடற்கரை, விவேகானந்தா் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலயம், அஷ்டலட்சுமி கோயில், கிண்டி குழந்தைகள் பூங்கா ஆகிய இடங்களுக்குச் சென்று திரும்பு வகையில் சுற்றுலா மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை இதற்காக பேருந்துகள் இயக்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகளை ஓரிடத்தில் இருந்து அடுத்த சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறலாம், எங்கு வேண்டுமானாலும் இறங்கலாம் என்பதே அந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
310 போ் பயணம்: சுற்றுலாத் துறையின் புதிய திட்டப்படி, காலை 9 மணி முதல் பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. மாலை 6 மணிக்குள்ளாக சுமாா் 310-க்கும் அதிகமானோா் ரூ.10 கட்டணத்தில் சென்னையில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களை பாா்வையிட்டதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.