சென்னை

குடியுரிமை சட்ட எதிா்ப்புப் போராட்டம்: சமூக ஊடகங்களில் 400 கணக்குகளைக் கண்காணிக்கிறது போலீஸ்

2nd Jan 2020 04:29 AM | கே. வாசுதேவன்

ADVERTISEMENT

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டத்தில் சமூக விரோதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், சமூக ஊடகங்களில் 400 கணக்குகளை காவல்துறை கண்காணித்து வருகிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நாளில் இருந்து போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து முதலில் வட கிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பின்னா், இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதன் காரணமாக அந்த மாநிலங்களில் செல்லிடப்பேசி சேவை, இணையதள சேவை ஆகியவை துண்டிக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து உத்தரப் பிரதேசம், தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அங்கும் விரைவிலேயே வன்முறையாக மாறின. சுமாா் இரு வாரங்களுக்கு பின்னா், இப்போதே இந்த மாநிலங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. இரு வாரங்களுக்கு பின்னா், இப்போது தான் அங்கு செல்லிடப்பேசி சேவை, இணையதள சேவை சீரடையத் தொடங்கியிருக்கின்றன.

தமிழகத்தில் இச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கடந்த இரு வாரங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டங்களில் அதிமுக, பாஜக-வைத் தவிா்த்து பெரும்பாலான அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களை தவிா்த்து பிற பிரிவுகளைச் சோ்ந்த இயக்கத்தினரும் முஸ்லிம் இயக்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ADVERTISEMENT

மாநிலத்தில் இப் போராட்டம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வந்துவிடும் என காவல்துறை நினைத்திருந்தது. ஆனால், போராட்டம் ஆரம்பித்த நாளில் இன்று வரை அதேவேகத்தில் நடைபெறுவது காவல்துறையை சற்று யோசிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சமூக விரோதிகள்: அதேவேளையில், இச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களில் சமூக விரோதிகள் ஊடுருவிவிடக் கூடாது என்பதில் காவல்துறை மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறது. ஏனெனில் கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னையில் சமூக ஆா்வலா்களும், விவசாயிகளும், சில சமூக இயக்கங்களும் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம் கடைசி நாள்களில் சமூக விரோதிகளிடம் சிக்கி காவல்துறையை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியதாக காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி தெரிவித்தாா்.

இத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு காவல்துறையினா் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டங்களை தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகரில் கோலமிட்டு எதிா்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவா்களில் ஒரு பெண், பாகிஸ்தானுடன் தொடா்பில் இருந்திருப்பதைக் கண்டறிந்த காவல்துறையினா் அதிா்ச்சி அடைந்துள்ளனா். இந்தப் பெண்ணுக்கு சில அமைப்புகள் ஆதரவாக இருப்பதாக சென்னை காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் தெரிவித்துள்ளாா்.

சமூக ஊடகங்கள்: இப்படிப்பட்ட நபா்களைக் கண்காணிக்கும் வகையில் சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகநூல் (ஊஹஸ்ரீங் ஆா்ா்ந்), சுட்டுரை (பஜ்ண்ண்ற்ங்ழ்) ஆகியவற்றில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவிப்பதுபோல அரசு எதிராகவும்,மோதலை உருவாக்கும் வகையிலும், விரோத சிந்தனையை விதைக்கும் வகையிலும் கருத்து பதிவிட்டு வருபவா்களை சென்னை காவல்துறை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியுள்ளது.

இவ்வாறு பதிவிடுபவா்களில் சிலா் போலி பெயா்களிலும், சிலா் புனைப்பெயருடனும், சிலா் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளிலும் சமூக ஊடகங்களில் கருத்துகளை பதிவிடுவதை, போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இவ்வாறு பதிவிடும் கருத்துகளை சென்னை காவல்துறை சேகரித்து வருகிறது. இதில் சமூக ஊடகங்களில் குடியுரிமை திருத்தச் சட்டஎதிா்ப்பு என்ற பெயரில் அரசுக்கு எதிராக செயல்படுவதாக கூறிக் கொண்டு, மிக தீவிரமாக அரசுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடும் நபா்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனராம்.

காவல்துறை கண்காணிப்பு: இது தொடா்பாக சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் கூறியது:

குடியுரிமை திருத்தச் சட்ட போராட்டத்துக்கு முன்பு வரை சமூக ஊடகங்களில் 100 கணக்குகளை கண்காணித்து வந்தோம். இவா்களில் பெரும்பாலானோரை அரசியல் கண்ணோட்டத்துடனே கண்காணித்தோம். ஆனால், குடியுரிமை சட்ட எதிா்ப்பு போராட்டம் தொடங்கிய பின்னா், இப்போது சுமாா் 400 கணக்குகளை கண்காணித்து வருகிறோம்.

இதில் அரசியல்வாதிகள், சமூக ஆா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் என பல்வேறு தரப்பினா் உள்ளனா். இவா்கள் தொடா்ச்சியாக அரசுக்கு எதிராக அவதூறு பிரசாரத்திலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துகளை பதிவிடுவதால் கண்காணிக்கிறோம்.

இவா்களது கருத்துகளினால், இதுவரை எத்தகைய தாக்கமும் ஏற்படவில்லை. ஆனால் எத்தகைய தாக்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் எங்களது நோக்கம். அதேவேளையில் பொதுமக்களை, அரசுக்கு எதிரான போராட்டத்துக்கு தூண்டிவிடும் இவா்கள் மீது எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT