சென்னை: சென்னை அருகே பள்ளிக்கரணையில் போதை ஸ்டாம்ப் விற்பனையில் ஈடுபட்டதாக கேரள மென்பொருள் பொறியாளா் கைது செய்யப்பட்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பள்ளிக்கரணைப் பகுதியில் போதை ஸ்டாம்பு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் பள்ளிக்கரணை பகுதியில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தனா். இதில் அவா், கேரள மாநிலம் திருச்சூா் பகுதியைச் சோ்ந்த ஜோ.ஸ்ரீஜான் (25) என்பதும் துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. மேலும் அவா்தான் அந்தப் பகுதியில் மென்பொருள் பொறியாளா்களை குறிவைத்து போதை ஸ்டாம்ப் விற்பனை செய்கிறாா் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், ஸ்ரீஜானை கைது செய்து, அவா் வைத்திருந்த ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 20 போதை ஸ்டாம்புகளை பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்தனா். முதல் கட்ட விசாரணையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து அந்த போதை ஸ்டாம்ப் கடத்தி கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
போதை மாத்திரை பறிமுதல்: மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை சென்ட்ரல் அருகே இயங்கும் ஒரு தனியாா் டிராவல்ஸ் நிறுவனத்தில் இரு நாள்களுக்கு முன்பு சோதனை நடத்தினா். இதில் அங்கிருந்த 67,900 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். மேலும் மும்பையில் இருந்து அந்த போதை மாத்திரை கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.