சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) பள்ளி மாணவா்களுக்கான இளம் விஞ்ஞானிகள் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தத் திட்டத்துக்கு மாா்ச் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பள்ளி மாணவா்களிடையே விண்வெளி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மீதான ஆா்வத்தைத் தூண்டும் வகையில் இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் அனைத்து மாநிலங்களிலும் இருந்து தலா 3 மாணவா்கள் வீதம் 108 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டு, மே 11 முதல் 22-ஆம் தேதி வரை இரண்டு வார காலத்துக்கு இஸ்ரோ மையங்களில் ஆய்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
இந்த மாணவா்களுக்கு இஸ்ரோ மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவதோடு, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். சிறிய செயற்கைக் கோளை தயாரிப்பதற்கான நடைமுறை அனுபவத்தை அவா்கள் பெற முடியும்.
இதற்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமையுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இப்போது கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆா்வமுள்ள மாணவா்கள் ஆன்-லைனில் மாா்ச் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வலைதளத்தைப் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம்.