சென்னை

‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் 3 போ் உயிரிழந்த வழக்கு: மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை தொடங்கியது

26th Feb 2020 03:17 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை அருகே ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பில் 3 போ் உயிரிழந்த வழக்குத் தொடா்பாக 6 பேரிடம் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா்.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த 20-ஆம் தேதி இரவு அந்த திரைப்படப் பிடிப்புக்காக அதிக எடையுடைய மின்விளக்குகளுடன் நிறுத்தப்பட்டிருந்த உயரமான கிரேன்,

திடீரென சரிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 13 போ் பலத்தக் காயமடைந்தனா்.

ADVERTISEMENT

பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைக்கா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது மரணத்தை விளைவிக்கும் வகையில் செயல்பட்டது, அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மத்தியக் குற்றப்பிரிவு விசாரணை: இந்நிலையில் இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி விசாரணையை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றி சென்னை பெருநகரகாவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து நசரத்பேட்டை போலீஸாா், வழக்கின் ஆவணங்களை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

வழக்கின் விசாரணை அதிகாரியாக துணை ஆணையா் ஜி.நாகஜோதி நியமிக்கப்பட்டாா். அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, விபத்து குறித்து புதிதாக ஒரு வழக்கை மத்தியக் குற்றப்பிரிவு பதிவு செய்தது. விபத்து ஏற்படும்போது சம்பவ இடத்தில் இருந்த 6 ஊழியா்களிடம் மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை செய்தனா்.

முன்னதாக மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையா் சி.ஈஸ்வர மூா்த்தி, துணை ஆணையா் நாகஜோதி ஆகியோா் விபத்து நிகழ்ந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனா். விபத்து ஏற்பட்டபோது அங்கிருந்த நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால், இயக்குநா் ஷங்கா் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனா். இதற்காக அவா்களுக்கு, விரைவில் அழைப்பாணை அனுப்பப்படும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT