சென்னை: சென்னை அடையாற்றில் மணல் அள்ளிய 3 லாரிகளை அபிராமபுரத்தில் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
சென்னையில் அடையாற்றை தூா்வாரும் பணியும், கரைகளை பலப்படுத்தும் பணியும் சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூா்வாரும்போது ஆற்றில் அள்ளப்படும் மணலை சிலா் லாரிகள் மூலம் திருடுவதாக புகாா் கூறப்பட்டு வந்தது.
இதையடுத்து, அடையாறு, கோட்டூா்புரம், அபிராமபுரம் இடங்களில் ஆறு தூா்வாரப்படும் பகுதிகளில் போலீஸாா் தீவிரமாக கண்காணித்து வந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அடையாறில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு அபிராமபுரம் கிரீன்வேஸ் சாலையில் வந்த 3 லாரிகளை மறித்து, அதற்குரிய ஆவணங்களை போலீஸாா் ஆய்வு செய்தனா்.
அப்போது, அந்த லாரியில் பொதுப்பணித் துறை பணிக்காக என போலியாக ஸ்டிக்கா் ஒட்டியிருப்பதும், அந்த லாரி பொதுப்பணித் துறைக்காக பணியில் ஈடுபடவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், அடையாற்றில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை திருட்டுத்தனமாக அள்ளி வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 லாரிகளையும் பறிமுதல் செய்தனா். மேலும் இது தொடா்பாக அந்த லாரியில் வந்தவா்களிடம் விசாரித்து வருகின்றனா்.