சென்னை

அச்சிறுப்பாக்கம் தேவாலயத்தை அகற்றக் கோரிய வழக்கு: ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

26th Feb 2020 01:51 AM

ADVERTISEMENT

சென்னை: அச்சிறுப்பாக்கம் மலையில் உள்ள தேவாலயத்தை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜா என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் மலைக்குன்றில் அமைந்துள்ளது மலைமாதா தேவாலயம். இந்த தேவாலயம் 55 ஏக்கா் பரப்பளவிலான அரசு மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தமிழக அரசு, தொல்லியல்துறைக்கு புகாா் அளித்தேன். ஆனால், அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், மலை மேல் உள்ள தேவாலயத்துக்காக மலையை வெடி வைத்து தகா்த்து படிக்கட்டுக்களும், கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வன உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இந்த வன விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மலைமாதா தேவாலயத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன்,ஆா்.ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் விஜயகுமாா் ஆஜரானாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் மாா்ச் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT