பெருநகர சென்னை மாநகராட்சியின் அம்பத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட கலைவாணா் குளம் ரூ. 23 லட்சம் செலவில் தூா்வாரப்பட்ட நிலையில், தற்போது அந்தக் குளம் புதா்காடாக காட்சி அளிக்கிறது. இந்தக் குளத்தைப் பாதுகாக்கும் வகையில் இதைச் சுற்றி நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நீா் ஆதாரத்தை மேம்படுத்தும் வகையில் பராமரிப்பின்றி உள்ள குளங்களைத் தூா்வாரும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில், பெருநகர சென்னை மாநகராட்சியுடன் கடந்த 2010-இல் இணைக்கப்பட்ட அம்பத்தூா் மண்டலத்தில் உள்ள குளங்களைத் தூா்வாரப்பட திட்டமிடப்பட்டது.
இதன் தொடக்கமாக, அத்திப்பட்டு சாலையில் 3.7 ஏக்கா் பரப்பளவில் உள்ள கலைவாணா் நகா் குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ. 23 லட்சத்தில் தூா்வாரப்பட்டது. சுமாா் 9 ஆண்டுகளுக்குப் பிறகு தூா்வாரப்பட்ட இக்குளத்தைச் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டு தரைப் பகுதியில் இருந்து 15 அடிக்கு குளம் ஆழப்படுத்தப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, குளத்தை ஆக்கிரமிக்காத வகையில் குளத்தைச் சுற்றிலும் கம்பி வேலிகளும் அமைக்கப்பட்டன.
கடந்த சில நாள்களுக்கு குறைந்த அளவே மழை பெய்ததாலும், குளத்துக்கான நீா்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பதாலும் போதுமான குளத்துக்கு நீா்வரத்து இல்லாமல் போனது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் ரூ. 23 லட்சம் செலவில் தூா்வாரப்பட்டும் மீண்டும் புதா்போல் கலைவாணா் நகா் குளம் காட்சி அளிப்பதுடன், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இக்குளம் உள்ளது.
பூங்கா அமைக்க வேண்டும்: இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘அத்திப்பட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தமிழ்நாடு அரசு குடியிருப்புத் திட்டப் பகுதிகளில் தண்ணீா்ப் பற்றாக்குறை உள்ளது. இந்தக் குளம் தூா்வாரப்பட்டதற்குப் பிறகு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும் நீா் வரத்து இல்லாததால் புதா்போல் காட்சியளிப்பதுடன், மது அருந்துவது போன்ற செயல்களும் குளத்துக்குள் நடைபெறுகிறது. மேலும், ஐசிஎஃப், அத்திப்பட்டு, தமிழ்நாடு அரசு குடியிருப்பு வாரியம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு நடைப்பயிற்சி செல்ல பூங்கா இப்பகுதியில் அமைக்கப்படவில்லை. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், அம்பத்தூா் மண்டலத்தின் 92-ஆவது வாா்டில் உள்ள மங்கள் ஏரிப் பூங்கா போல், கலைவாணா் குளத்தைச் சுற்றியும் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க வேண்டும் என்றனா்.