குடலிறக்க பாதிப்புக்கான இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் சென்னையில் மாா்ச் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் நடைபெறும் இந்த முகாமில், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக மருத்துவப் பரிசோதனைகளை செய்து கொள்ளலாம் என்று மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: ஆண்களில் நான்கில் ஒருவருக்கும், பேறு காலத்துக்கு பிறகு பெண்களில் பலருக்கும் குடலிறக்க பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகின்றன. அந்தப் பாதிப்பை வருமுன் தடுக்க முடியாது என்றாலும், அதற்கு உரிய சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால் குடலிறக்க பாதிப்பில் இருந்து விரைவில் குணமாகலாம்.
ஆனால், சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லை. அதை மேம்படுத்தும் விதமாக ஜெம் மருத்துவமனை சாா்பில் பிப்.24-ஆம் தேதி முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை குடலிறக்க விழிப்புணா்வு வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதன் ஒருபகுதியாக இலவச மருத்துவப் பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. அறுவை சிகிச்சைகளும் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளப்பட உள்ளன என்றனா்.