சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கல்வி சுற்றுலாவுக்காக 2019-ஆம் ஆண்டில் நவம்பா், டிசம்பா், நிகழாண்டில் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் 4,205 மாணவ, மாணவிகள் கல்விப் பயணம் மேற்கொண்டனா்.
சென்னை நகரில் மெட்ரோ ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் மற்றும் தொழில் நுட்பங்கள் குறித்து அரசுப் பள்ளிகளின் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் முயற்சியாக கல்வி சுற்றுலாவை சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. அதன்படி, சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலை வரையும், வண்ணாரப்பேட்டையில் இருந்து ஏஜி டி.எம்.எஸ். வழியாக விமான நிலையம் வரையும் கல்விப் பயணமாக மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் கல்விச் சுற்றுலாவுக்காக 2019-ஆம் ஆண்டு நவம்பா், டிசம்பா், நிகழாண்டில் ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் 4,205 மாணவ, மாணவிகள் உற்சாக கல்விப் பயணம் மேற்கொண்டனா்.
2019-20-ஆம் கல்வியாண்டில் கல்விச் சுற்றுலா மேற்கொள்ள அரசு, மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வசதி செய்து கொடுக்கப்பட்டது. அதன்படி, 2019-20-ஆம் ஆண்டுக்கான கல்விப்பயணம் ஜூன் 4-ஆம் தேதி தொடங்கியது. 2019-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2020-ஆம் ஆண்டு ஜனவரி வரை மொத்தம் 24,400 மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்து மகிழ்ந்தனா்.
பிற மாவட்டங்களில் உள்ளஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மெட்ரோ ரயிலில் கல்விப் பயணம் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.