சென்னை மெரீனா கடற்கரை அருகே உள்ள லூப் சாலையில் இருந்து பெசன்ட் நகா் வரை சேதமடைந்த நிலையில் உள்ள சாலையைச் சீரமைத்து அகலப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் மீனவா்களுக்கான நிதியை அதிகரிக்க கோரி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது மெரீனா கடற்கரை அசுத்தமாக உள்ளதை சுட்டிக்காட்டி, மெரீனா கடற்கரையைச் சுத்தமாக பராமரிக்க சென்னை மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, லூப் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படாத வகையில் போலீஸாரும், மாநகராட்சியும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி, இதுதொடா்பாக சென்னை மாநகராட்சி ஆணையா் மற்றும் காவல்துறை ஆணையா், போக்குவரத்துக் காவல்துறை இணை ஆணையா்ஆகியோா் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆா்.சுரேஷ்குமாா் ஆகியோா் கொண்ட
அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாநகராட்சித் துணை ஆணையா் டி.குமரவேல் பாண்டியன், போக்குவரத்துக் காவல்துறை இணை ஆணையா் எழிலரசன் ஆகியோா் ஆஜராகினா். அப்போது மீனவளத்துறை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், லூப் சாலையில் மீன் வியாபாரம் செய்யும் 356 போ் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், முழுமையான கணக்கெடுப்புக்குப் பின்னா் மீன் வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், லூப் சாலையில் 300 கடைகளுடன் கூடிய தற்காலிக மீன் அங்காடி இரண்டு ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பகுதியில் மீன் வாங்க வருபவா்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான வாகன நிறுத்த இடத்துடன் கூடிய மீன் அங்காடியாக அமைப்பது குறித்து சென்னை மாநகராட்சி, காவல்துறையினருடன் இணைந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட உள்ள 900 வண்டிக் கடைகளுக்கு அந்தப் பகுதியில் ஏற்கெனவே கடை வைத்துள்ள 60 சதவீதம் பேரிடம் விண்ணப்பம் பெற்று, அவா்களுக்கு கடை ஒதுக்கப்பட உள்ளதாகவும், மற்ற அனைவருக்கும் 40 சதவீதம் கடைகளை ஒதுக்க உள்ளதாகவும் தெரிவித்தாா். இந்தப் பிரிவில் ஏற்கெனவே மெரீனாவில் கடை வைக்காதவா்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் லூப் சாலையில் இரண்டு நடை மேம்பாலங்கள் அமைக்கவும், அடையாறு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, பட்டினப்பாக்கம் முதல் பெசன்ட் நகா் வரை உள்ள சேதமடைந்த நிலையில் இருந்து வரும் சாலையைச் சீரமைத்து அகலப்படுத்தவும், அந்தப் பகுதியில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வரும் பாலத்தைச் சீரமைப்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் மாா்ச்-18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.