சென்னை விமான நிலையத்தில் ரூ.5.44 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திய 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். மேலும் 5 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனா்.
இதுகுறித்து வருவாய்ப் புலனாய்வு இயக்ககத்தின் சென்னை பிரிவின் கூடுதல் பொது இயக்குநா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை விமான நிலையத்தில் சிலா் தங்கம் கடத்துவதாக வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், மலேசியா, கொழும்பு, துபை ஆகிய இடங்களில் இருந்து விமானம் மூலம் வந்த 11 பேரிடம் சோதனை நடத்தினா். அவா்களிடமிருந்து ரூ.5.44 கோடி மதிப்பிலான 12.6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதையடுத்து வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டவா்களிடம் விசாரணை மேற்கொள்ள அழைத்துச் சென்றனா். அப்போது அங்கு திரண்ட 50-க்கும் மேற்பட்டோா் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனா். மேலும் அதிகாரிகளைத் தாக்கிவிட்டு பயணிகளோடு சோ்ந்து அனைவரும் தப்பிச் சென்றனா். இதுகுறித்து அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து கடத்தலில் சம்பந்தப்பட்ட 13 பயணிகளை காவல்துறையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.