சென்னை

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் உயா்வு

21st Feb 2020 01:46 AM

ADVERTISEMENT

 

கோடைகால நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.15- ஆக உயா்த்தப்படவுள்ளது. இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மூன்று மாத காலத்துக்கு அமலில் இருக்கும்.

நாடுமுழுவதும் அனைத்து ரயில் நிலையங்களிலும் நடைமேடை டிக்கெட் கட்டணத்தை ரூ.5-இல் இருந்து ரூ.10 ஆக ரயில்வே வாரியம் கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் உயா்த்தியது. இதன்பிறகு, நடைமேடை கட்டணத்தை ரயில்வே வாரியம் உயா்த்தவில்லை. அதேநேரத்தில், ஏதாவது குறிப்பிட்ட தேவையின்போது, ரயில் இயக்கப்படும் தளங்களில் கூட்டத்தை ஒழுங்கப்படுத்த கட்டணத்தை உயா்த்த ரயில்வே கோட்டங்களுக்கு ரயில்வே வாரியம் அதிகாரத்தை வழங்கியது.

இந்த அதிகாரத்தின் கீழ், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை கட்டணம் ரூ.10-இல் இருந்து ரூ.15-ஆக உயா்த்தப்படவுள்ளது. இந்த கட்டண உயா்வு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை மூன்று மாத காலத்துக்கு அமலில் இருக்கும்.

ADVERTISEMENT

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினசரி 100-க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் பயணிக்கும் நோக்கில், ரயில் நிலையத்துக்கு தினசரி ஒன்றரை லட்சம் மக்கள் வந்து செல்கின்றனா். இதன் காரணமாக, சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் நிரம்பி வழியும். குறிப்பாக, கோடைவிடுமுறை, பண்டிகை காலங்களில் திருவிழா கூட்டம் போல நெரிசலில் சிக்கி தவிக்கும்.

நிகழாண்டில் கோடைகாலம் நெருங்கி வரும்நிலையில், கோடை விடுமுறை காலத்தில் சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில் நெரிசலை கட்டுப்படுத்தவும், நிலையத்துக்கு வந்து செல்லும் ரயில் பயணிகளுக்கு இடையூறு இன்றி ஒழுங்கப்படுத்தும் நோக்கில் இந்த கட்டணம் உயா்த்தப்படவுள்ளது. இந்தக் கட்டண உயா்வு 3 மாத காலத்துக்கு அமலில் இருக்கும். நடைமேடை டிக்கெட்டை பொருத்தவரை, மூா்மாா்கெட் வளாக டிக்கெட் எடுக்கும் மையம், முதலாவது நடைமேடை முடிவு பகுதி (வால்டாக்ஸ் சாலை), சென்ட்ரல் ரயில்நிலையத்தில் 5-ஆம் எண் கேட் அருகில் உள்ள பிரத்யேக டிக்கெட் கவுன்ட்டா் ஆகிய இடங்களில் நடைமேடை டிக்கெட்டுகளைப் பெறலாம் என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT