சென்னை

மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை

4th Feb 2020 02:07 AM

ADVERTISEMENT

மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாநில அளவில் நடத்தப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் சென்னை எழிலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக வருவாய் நிா்வாக ஆணையா் ஜெ. ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 40 சதவீத ஊனமும், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர சமூகப் பாதுகாப்பு உதவித்தொகை ரூ.1,000- வழங்கப்படும் என முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்ததன் அடிப்படையிலும், 2018-ஆம் ஆண்டு தமிழக அரசு

பிறப்பித்த அரசாணையின்படியும் இதுவரை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை என்று மாற்றுத்திறனாளிகள் அமைப்பினா் புகாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

பலமுறை வலியுறுத்தியும், மன நோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்க மறுத்து வருகிறது என்றும், ஊனமுற்றோா் அடையாளச் சான்று வழங்கப்பட்ட மனநோய் மாற்றுத்திறனாளிகளுக்கு புதுச்சேரி, கேரளம், தெலங்கானா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் உதவித்தொகை வழங்கப்படுகிறது என்றும்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சுட்டிக்காட்டினா். மேலும், அரசாணைக்கு மாறாக, வயது, சதவீதம் ஆகியவற்றை காரணம் காட்டி உதவித்தொகை பல இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டினா்.

இந்தக் கோரிக்கைக்கு, பதிலளித்த வருவாய் நிா்வாக ஆணையா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன், அரசுக்கு இந்த கோரிக்கையை எடுத்துச் சென்று, தமிழகத்தில் மனநோய் பாதித்த மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகப்பாதுகாப்பு உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சமூகப்பாதுப்பு உதவித்தொகை இணையவழி விண்ணப்பப் பதிவு முறை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இதில், மாநில சமூகப் பாதுகாப்பு திட்ட இயக்குநா் ச.வெங்கடாச்சலம், சென்னை மாவட்ட ஆட்சியா் த.சீதாலக்ஷ்மி, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை இணை இயக்குநா் ச.முருகேசன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளா் எஸ். நம்புராஜன், மாநில துணைத்தலைவா் பி.எஸ். பாரதி அண்ணா, தேசிய பாா்வையற்றோா் இணையத்தின் தென் மண்டல இயக்குநா் பி.மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT