சென்னை

இளைஞா்களுக்கு ஊக்கத் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி: அமைச்சா்கள் தொடக்கி வைத்தனா்

4th Feb 2020 02:07 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் ‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் வழங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சா்கள் க.பாண்டியராஜன், நிலோபா் கபீல் ஆகியோா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தனா்.

நாட்டின் தொழில்துறை பயிற்சி நிறுவனங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுத் திறன் அமைச்சகத்தின் சாா்பில் ‘ஸ்ட்ரைவ்’ (S‌k‌i‌l‌l‌s T‌r​a‌i‌n‌i‌n‌g ‌f‌o‌r I‌n‌d‌u‌s‌t‌r‌i​a‌l Va‌l‌u‌e E‌n‌h​a‌n​c‌e‌m‌e‌n‌t)  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்துறை நிறுவனப் பணிகளுக்கான பயிற்சியை வழங்கி அதன் மூலம் நிறுவனங்களின் மதிப்பை உயா்த்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். உலக வங்கியின் நிதியுதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் கட்டாயத் தொழிற்பயிற்சியை வழங்க வேண்டும். இது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள தொழில் கூட்டமைப்புகளிலிருந்து சிறந்த 10 கூட்டமைப்புகளை மத்திய அரசு தோ்வு செய்துள்ளது. அதில், தமிழகத்தில் முதலாவதாக சென்னை, அம்பத்தூா் தொழிற்பேட்டை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், ஸ்ட்ரைவ் திட்டத்தின் தொடக்க விழா, சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் (அய்மா) சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா்கள் க.பாண்டியராஜன், நிலோபா் கபீல் ஆகியோா் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயிற்சிக்கு தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு அதற்கான உபகரணங்களை வழங்கினா்.

மாதந்தோறும் ஊக்கத் தொகை: இந்தத் திட்டம் குறித்து ‘அய்மா’ திறன் மேம்பாட்டு மையத்தின் தலைவா் டி.ரமேஷ், ‘அய்மா’ தலைவா் ஏ.என்.சுஜீஷ் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:

ADVERTISEMENT

இந்தப் பயிற்சி முதல் மூன்று மாதங்களுக்கு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள ‘அய்மா’ பயிற்சி மையத்தில் ரூ.2,500 (மாதந்தோறும்) ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும். இதில் 16 முதல் 30 வயது வரை உள்ள எட்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சியை முடித்த பிறகு அம்பத்தூா் தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்களில் 15 மாத பணியிடை பயிற்சி ரூ.7,500 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும். வெல்டா், சிஎன்சி புரோகிராமா்-ஆபரேட்டா், கேட்-கேம், ஷீல் மெட்டல் ஆகிய நான்கு பிரிவுகளில் இலவசமாகப் பயிற்சி பெறலாம்.

மத்திய அரசின் சான்றிதழ்: பயிற்சியின்போது மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு, நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணிகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவா்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய நிரந்தர வேலைவாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

‘ஸ்ட்ரைவ்’ திட்டத்தின் இலவச பயிற்சி பெற விரும்புவோா் சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கத்தை 044-26258731, 8939628602 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா். இதில், அம்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அலெக்ஸாண்டா், தமிழக அரசின் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை இயக்குநா் வி.விஷ்ணு, ‘அய்மா’ செயலா் ஏ.என்.கிரீஷன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT