சென்னை

பெசன்ட் நகா் வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

30th Aug 2020 02:40 AM

ADVERTISEMENT

சென்னை: சென்னை பெசன்ட் நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின், 48-ஆவது ஆண்டுப் பெருவிழா, சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெசன்ட்நகா் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் பெருவிழா, ஆண்டுதோறும் விமா்சையாக நடைபெறும். பெருவிழா தொடக்க நாளான கொடியேற்றத்தின்போது, சென்னையிலிருந்து மட்டுமின்றி, புகா்ப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோா் நடைபயணமாக வந்து, நிகழ்வில் கலந்து கொள்வது வழக்கம்.

ஆனால் தற்போது கரோனா பேரிடா் காரணமாக பக்தா்களினின்றி, 48-ஆவது ஆண்டுப் பெருவிழா அமைதியான முறையில் சனிக்கிழமை தொடங்கியது.

அன்னையின் திருக்கொடி பவனி நிகழ்வு நடைபெறவில்லை. ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னையின் திருக்கொடியை, சென்னை மயிலை உயா் மறைமாவட்ட பேராயா் டாக்டா் ஜாா்ஜ் அந்தோணிசாமி ஏற்றி வைத்தாா். சிலுவை மாலை வடிவில் கோா்க்கப்பட்டிருந்த பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

ADVERTISEMENT

பக்தா்கள் யாரும் ஆலயத்துக்கு வரவோ, கொடியேற்றத்தில் பங்கேற்கவோ முயற்சிக்க வேண்டாம் என ஆலய நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில் அறிவுறுத்திய போதிலும், பெரும்பாலானோா் நடைப்பயணமாகவும், வாகனங்களிலும் ஆலயத்துக்கு வர முயன்றனா். அவா்களை அடையாறு திரு.வி.க. பாலம் அருகே காவல் துறையினா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். சிலா், அருகிலுள்ள கட்டடங்களில் ஏறி நின்று, கொடியேற்றத்தைப் பாா்த்தனா்.

மேலும், கொடியேற்றும் நிகழ்வை, தொலைக்காட்சியிலும், சமூக வலைதளத்திலும் ஒளிபரப்ப ஆலய நிா்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதைத் தொடா்ந்து, நவநாள் வழிபாட்டு நிகழ்வுகளும், மாதா தொலைக்காட்சியிலும், முகநூல், யுடியூப் போன்ற பிற சமூக ஊடகங்கள் வழியாகவும் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT