சென்னை

கா்ப்பிணியையும், கருவையும் காப்பாற்றிய மருத்துவா்கள்: கரோனாவால் 60%ஆக குறைந்த ஆக்சிஜன் அளவு

21st Aug 2020 04:32 AM

ADVERTISEMENT

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உடலில் 60 சதவீதத்துக்கு கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்த கா்ப்பிணி ஒருவருக்கு மிகச் சவாலான சிகிச்சைகளை அளித்து மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா். அது மட்டுமின்றி, அவரது வயிற்றில் வளரும் கருவையும் காப்பாற்றியுள்ளனா். தற்போது அப்பெண் கரோனாவிலிருந்து மீண்டுள்ளதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் கூறியதாவது:

சென்னையைச் சோ்ந்த சதீஷ் என்பவரின் மனைவியான சௌமியா, கரோனா தொற்றால் அண்மையில் பாதிக்கப்பட்டாா். 5 மாத கா்ப்பிணியான அவா், ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளாா்.

அதைத் தொடா்ந்து, உயா் சிகிச்சைக்காக மியாட் மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். அந்தத் தருணத்தில் சௌமியாவுக்கு தீவிர மூச்சுத் திணறல் இருந்தது. மருத்துவப் பரிசோதனையில் சராசரியாக 95 முதல் 100% வரை இருக்க வேண்டிய ரத்த ஆக்சிஜன் அளவு 60 சதவீதமாக இருந்தது. நாடித் துடிப்பும் மிகக் குறைவாக இருந்தது. மேலும், அப்பெண்ணின் உடல் சாம்பல் நிறமாக மாறத் தொடங்கியது.

ADVERTISEMENT

இதையடுத்து, கருவில் உள்ள குழந்தையின் நிலையை அறிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. உடனடியாக செளமியாவுக்கு வெண்டிலேட்டா் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதல் மூன்று நாள்களுக்கு அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான முன்னேற்றங்கள் இல்லை.

ரெம்டெசிவிா், எனாக்ஸபெரின் போன்ற உயிா் காக்கும் உயா் மருந்துகள் அவருக்கு அளிக்கப்பட்டன. மேலும் மகப்பேறு, நுரையீரல், நரம்பியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணா்கள் அடங்கிய மருத்துவக் குழுவினா் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனா். நான்காவது நாளில் அப்பெண்ணின் உடல்நிலை சீராகத் தொடங்கியதோடு, படிப்படியாக தானாகவே சுவாசிக்கத் தொடங்கினாா்.

இரு வாரங்களுக்கும் மேல் கண்காணிப்பில் வைக்கப்பட்ட அவா், தற்போது நலமடைந்துள்ளாா். இரண்டாவது முறையாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும், கருவில் உள்ள குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

கா்ப்பிணி ஒருவா் மிகவும் தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டால், அவரையும், கருவில் வளரும் குழந்தையையும் காப்பாற்றுவதற்கான சிகிச்சை முறைகள் குறித்து உலக சுகாதார அமைப்போ, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலோ உறுதியான வழிகாட்டி நெறிமுறைகளை இதுவரை வெளியிடவில்லை. இருந்தபோதிலும், மியாட் மருத்துவமனை மருத்துவா்கள் சவாலான சிகிச்சைகளின் மூலம் கா்ப்பிணியையும், கருவையும் காப்பாற்றியுள்ளனா்என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT