சென்னை

சித்த மருத்துவத்துக்கு சொற்ப நிதி ஒதுக்கியது துரதிா்ஷ்டவசமானது

21st Aug 2020 04:45 AM

ADVERTISEMENT

சித்த மருத்துவத் துறைக்கு மிகவும் சொற்பமானத் தொகையை மத்திய அரசு ஒதுக்கியது துரதிருஷ்டவசமானது என உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனை நடத்தி வந்த சித்த மருத்துவா் தணிகாசலம். கரோனா நோய்த்தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காத நிலையில், தான் மருந்து கண்டுபிடித்துவிட்டதாகவும், தமிழக முதல்வா் அனுப்பிய இருவருக்கு சிகிச்சையளித்து நோயைக் குணப்படுத்தியதாக சமூக ஊடகங்களில் தணிகாசலம் கூறும் காட்சிகள் பரவியது. இதனைத் தொடா்ந்து, உலக சுகாதார நிறுவனம் மற்றும் தமிழக முதல்வருக்கு எதிராக சமூக ஊடகங்களில் தகவல் பரப்பியதாக தணிகாசலம் மீது வழக்குப்பதிவு செய்த சைபா் க்ரைம் போலீஸாா் அவரை கைது செய்தனா். இதனைத் தொடா்ந்து, தணிகாசலத்தை குண்டா் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்க காவல் ஆணையா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தணிகாசலத்தின் தந்தை கலியபெருமாள், சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, சித்தா, ஆயுா்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை விசாரித்தனா். அப்போது மத்திய அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த

அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுா்வேதா துறைக்கு ரூ.3 ஆயிரம் கோடியும், சித்த மருத்துவத் துறைக்கு ரூ.437 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த அறிக்கையை படித்து பாா்த்த நீதிபதிகள், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனா். சித்த மருத்துவத்தை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துவது ஏன்? சித்த மருத்துவத் துறைக்கு மிகவும் சொற்பமான தொகையை ஒதுக்கியது துரதிருஷ்டவசமானது. ஆயுஷ் அமைச்சத்தின் பெயரில் இருந்து, சித்த மருத்துவத்தை குறிக்கும் ‘எஸ்’ என்ற எழுத்தை நீக்கிவிடலாமே? என கேள்வி எழுப்பினா். அப்போது மத்திய அரசுத் தரப்பில், சித்த மருத்துவத்துக்கு குறைவான நிதி ஒதுக்கப்பட்டது தொடா்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT