சென்னை

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியாளா்கள்

21st Aug 2020 04:26 AM

ADVERTISEMENT

புதை சாக்கடையைச் சுத்தம் செய்வோருக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமளிக்குமாறு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில், கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீா் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால், புதை சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்பைச் சரி செய்ய மாநகராட்சியில் போதிய இயந்திரங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, கோயம்பேடு முதல் பாடி மேம்பாலம் வரையிலான நெடுஞ்சாலையில் உள்ள புதை சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதால், அதை சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் உள்பட சுமாா் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், இவா்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்காமல், புதை சாக்கடைக்குள் இறக்கி, சுத்தம் செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தி வருவதாகவும் நாளிதழில் செய்தி வெளியானது.

ஆணையருக்கு நோட்டீஸ்: இந்த விவகாரத்தை, மாநில மனித உரிமைகள் ஆணைய பொறுப்புத் தலைவா் நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தாா். மேலும், இது தொடா்பான விரிவான அறிக்கையை 4 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் மற்றும் சென்னை பெருநகர குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண் இயக்குநருக்கு நீதிபதி உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT