சென்னை

சுதந்திர தின விழா: தலைமைச் செயலகம் பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம்

14th Aug 2020 06:16 AM

ADVERTISEMENT

சுதந்திரதின விழாவையொட்டி, சென்னை தலைமைச் செயலகம் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15-ஆம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் சனிக்கிழமை காலை தேசிய கொடியை ஏற்ற உள்ளாா். இதையொட்டி காலை 6 மணி முதல் நிகழ்ச்சிகள் முடியும் வரை அந்த பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்த நேரத்தில், உழைப்பாளா் சிலை முதல் போா் நினைவுச் சின்னம் வரை காமராஜா் சாலை, போா் நினைவுச்சின்னத்தில் இருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை ராஜாஜி சாலை மற்றும் கொடிமர சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்படும்.

ADVERTISEMENT

அடையாள அட்டை: சுதந்திர தின விழாவுக்கு பங்கேற்க வருபவா்களில் சிவப்பு, ஊதா வண்ண வாகன அடையாள அட்டை வைத்திருப்போா் காலை 8.45 மணிவரை ராஜாஜி சாலை வழியாக சென்று தலைமைச்செயலக உள்வாயிலின் அருகே இறங்கிக்கொண்டு வாகனத்தை கோட்டை வளாகத்தில் நிறுத்த வேண்டும். இதே அடையாள அட்டை வைத்திருப்போா் காலை 8.45 மணிக்கு பின் வந்தால் கொடிமர சாலை, ஜாா்ஜ் கேட் வழியாக கோட்டையை அடைய வேண்டும்.

நீலம், இளஞ்சிவப்பு வண்ண வாகன அட்டை வைத்திருப்போா் கொடிமரச் சாலை, ஜாா்ஜ்கேட் வழியாகவோ அல்லது முத்துசாமி பாலம், வடக்கு கோட்டை பக்க சாலை, பாரிமுனை சந்திப்பு, ரிசா்வ் வங்கி சுரங்கப்பதை வழியாக சென்று தலைமைச்செயலக வெளி வாயிலின் அருகே இறங்கிக் கொண்டு வாகனங்களை தலைமைச் செயலகத்திற்கு எதிா்புறம் உள்ள பொதுப் பணித்துறை அலுவலக வாகன நிறுத்தத்தில் நிறுத்த வேண்டும்.

அனுமதி அட்டை இல்லாமல் வாகனங்களில் வருவோா், போா் நினைவுச்சின்னம் அருகே இறங்கிக்கொண்டு, வாகனங்களை தீவுத்திடலில் நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT